அன்னாரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை (31.10.2009) மாலை 5மணியளவில் மதுரை தத்தனேரி மயானத்தில் நடைபெறுகிறது.
இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பொ.மோகன் இந்திய மாணவர் சங்கத்தில் தம்மை இணைத்து கொண்டு தனது அரசியல் பணியை துவக்கினார். 1973ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலப் பொன்னகரம் காஸ்ட்ரோ கிளையில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் செயல்துடிப்பு மிக்க ஊழியராக செயல்பட்ட பொ. மோகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நகரச் செயலாளராகவும் பின்னர் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பொ.மோகன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். மதுரை அரசு மருத்துவமனையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிரம்மாண்டமான மறியல் போராட்டத்தை நடத்தி காவல்துறையின் கொடூர தடியடி தாக்குதலுக்கு உள்ளானார். மேலும் மக்களின் பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்று 52 நாட்கள் சிறையில் அவர் இருந்துள்ளார். கடந்த 1999ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பொ. மோகன், 2004ம் ஆண்டும் தொடர்ந்து மதுரை மக்களின் நல்லாதரவுடன் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூச்சிபட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி-மீனாட்சி ஆகியோரின் மகனான பொ.மோகன் பி.ஏ.பட்டதாரி யாவார். இவர் 30.12.1949ம் ஆண்டு பிறந்தார்.
இவரது மனைவி பூங்காவனம் மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பகத்சிங், வைகைராஜ், நேதாஜி என்ற மூன்று மகன்களும், பாரதி, கங்கா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டிருந்த பொ.மோகனின் உடல்நிலை மோசமடைந்ததையொட்டி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளியன்று மாலை காலமானார். அவரது உடல் சென்னையிலிருந்து மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
பொ.மோகன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை மதுரை மகபூப்பாளையம் சர்வோதயாசாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. அங்கிருந்து மாலை 5 மணிக்கு பொ.மோகன் உடல் ஊர்வலமாக தத்தனேரி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.