Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாநகரசபை உறுப்பினரின் தந்தை வெள்ளைவானில் கடத்தப்பட்டார்

கொழும்பு, கொச்சிக்கடையிலுள்ள தனது வியாபார நிலையத்திற்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளை, வெள்ளை வானொன்றில் இருந்து திடீரென இறங்கிய ஏழு பேர் கொண்ட ஆயுதக்குழு கடைக்குள் புகுந்தது. அத்துடன், துப்பாக்கிமுனையில் வர்த்தகரை வானுக்குள் தள்ளிய குழு மின்னல் வேகத்தில் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் சிவிலுடையில் இருந்தனர். அவர்கள் பயன்படுத்திய வாகனம் TB 0867 என்ற இலக்கத் தகட்டைக் கொண்டிருந்தது என்றபோதிலும் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அது போலியான இலக்கத்தகடு என்பது தெரியவந்திருக்கிறது.
கடத்தப்பட்ட வர்த்தகர் கிறிஸ்தோபர், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அன்ரன் ரோயின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. வர்த்தகர் கடத்தப்பட்ட தகவலையறிந்த கொச்சிக்கடை பகுதி மக்கள் நேற்றுப் பிற்பகல் வீதியில் இறங்கி டயர்களைக் கொளுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொச்சிக்கடையை அண்டிய பகுதிகளின் வீதிகளை மூடவேண்டிய நிலை பொலிஸாருக்கு ஏற்பட்டது.
கடத்தல் இடம்பெற்றவுடன் அவரது குடும்பத்தினர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்தனர். பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வர்த்தகர் கடத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை. ஆனால், தனது தந்தையாருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான தொலைபேசி அழைப்புகள் வந்திருப்பதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரோய் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் அதன் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்சவின் தலைமையிலேயே வெள்ளைவான் கடத்தல்களை மேற்கொள்கிறது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

Exit mobile version