யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடந்து முடிந்துள்ள தேர்தலில் இருந்து தாங்கள் பாடம் படிப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
அந்த நம்பிக்கையிலேயே இந்தக் கடிதத்தை வரைய விரும்பினோம்.
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் வெற்றிடம் எற்பட்டதுபோன்ற ஒரு எண்ணம் புலம்பெயர் தமிழர்களுக்கு எற்பட்டிருந்ததை தாங்கள் அவதானித்திருப்பிர்கள்.
ஆனால் எம்மில் சிலரோ, அந்த இடத்தை நீங்களே நிரப்புவீர்கள் என்றும், தங்களாலேயே அது சாத்தியமானது என்றும் நம்பினோம்.
ஆனால் எமது நம்பிக்கை இன்று பொய்யாகிப்போயிருக்கின்றது.
அந்த நம்பிக்கை பொய்யாகிப் போனதற்கு தாங்கள் காரணமாக இருக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இன்றும் எமக்கு உண்டு.
அதனாலேயே இந்தக் கடிதத்தை எழுத மனம் உந்தியது.
யாழ்ப்பாண மாநகரசபைக்கு நடந்த தேர்தலில் எந்தவித பிரச்சாரமும் செய்யாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உங்களுக்கு முக்கிய சவாலாக இருந்திருக்கின்றது.
ஆனால் நீங்களோ உங்கள் அரசியல் போட்டியாளராக ஆனந்தசங்கரி அவர்களையே வரித்துக்கொண்டு அவருக்கு எதிராகவே பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள்.
நினைத்துப்பாருங்கள். யாழ்ப்பண நகரத்தில் மிகக் கடைசிக்காலத்தில் மாத்திரமே உங்கள் எதிரணியலுள்ளவர்கள் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டமுடிந்தது.
அப்படி யாராவது ஒட்டினால், அதற்கு மேலாக தங்கள் “தோழர்கள்” உங்கள் சுவரொட்டிகளை ஒட்டுகின்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக பலரும் குற்றம் சாட்டினர்.
யாழ்ப்பாணத்தில் எங்கு பார்த்தாலும் தங்கள் முகம் மட்டுமே காட்சி தந்ததாக யாழ்ப்பாண வாசிகள் பலரும் தெரிவித்தனர்.
தமிழக சுவரொட்டிகளின் பாணியில் தாங்கள் பாரிய சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரியவருகின்றது.
அப்படியிருந்தும் ஏன் இந்தத் தோல்வி.?
நீங்கள் நிச்சயம் தனிமையில் இருந்தபோது சிந்தித்திருப்பீர்கள்.
யாழ்ப்பாண மக்களில் எண்பது வீதமானவர்கள் ஏன் தேர்தலைப் புறக்கணித்தார்கள்?
அவர்கள் அரசுக்கு தமது எதிர்ப்பைக் காட்ட விரும்பியிருந்தால் கூட்டமைப்பினருக்கு வாக்களித்திருப்பார்கள்.
அவ்வாறு வாக்களிக்காது விட்டது என்?
அவர்கள் அரசுக்கு தமது எதிர்ப்பைக் காட்ட விரும்பவில்லை.
நீங்கள் அரசுடன் சேர்ந்ததால்தான் இந்த தோல்வி, தனித்துக் கேட்டிருந்தால் அதிக இடங்களைப் பிடித்திருக்கலாம் என்று உங்கள் “தோழர்கள்” வழக்கம்போல உங்களை தவறாக வழிநடத்தலாம்.
அப்படி அரசுடன் சேர்ந்ததால் தான் அவர்கள் உங்களைப் புறக்கணித்தார்கள் என்றால் அவர்கள் தெரிவு எதுவாக இருந்திருக்கும்?
நிச்சயம் அவர்கள் ஆனந்தசங்கரியின் அணிக்கு வாக்களித்திருப்பார்கள்.
அப்படியும் அவர்கள் செய்யாதது ஏன்?.
ஆக, இந்த மக்கள் ஒரு புது தலைமையை எதிர்பார்க்கின்றார்கள் என்று கொள்ளலாமா?
உங்கள் சுவரொட்டிகள் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் தெரியவேண்டும் என்று உங்கள் “தோழர்கள்” உங்களுக்கு ஆலோசனை கூறியிப்பார்கள்.
ஆனால் அதுவே உங்கள் மீது மக்களுக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருக்காது?
புலிகளும் முன்னர் இதைத்தானே செய்தார்கள்.
புலிகள் வேண்டாம் என்றால் அதேபாணியில் பயணிக்க விரும்பும் உங்களை எப்படி எற்றுக்கொள்வார்கள் என்று சிந்தித்ததுண்டா?
யாழ் நகரில் இரவு வேளைகளில் நடக்கும் கொள்ளைகளையும், வர்த்தகர்களிடம் கப்பம் பெறுதலையும் ஏன் நிறுத்த முடியவில்லை? அது உங்கள் “தோழர்கள்தான்” செய்கின்றார்கள் என்று நாம் நம்பப்போவதில்லை.
ஆனால் இவையெல்லாம் நிறுத்தப்படவேண்டும் என்று நீங்கள் பொலிசாருக்கோ அல்லது படையினருக்கோ அழுத்தம் கொடுக்காதது மக்களை வெறுப்படையச் செய்யும் என்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் யாழ். முத்தவெளியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சிக்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வந்திருந்தனராம்.
ஆனால் தேர்தலில் வாக்களிக்க இருபதாயிரம் பேர் மாத்திரமே வந்தது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள் “தோழரே”.
இனியாவது நீங்கள் சிந்திக்காவிட்டால்,
இன்னுமொரு அரசியல் தலைமையால்ததான் இந்த இடைவெளியை நிரம்பவேண்டியிருக்கும்.