இது தொடர்பாக ஈ.பி.டி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
யாழ். குடாநாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் தருணம் பார்த்து மிகக் கொடுமையான முறையில் நடத்தப்பட்டிருக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான திருச்செல்வம் கபில்நாத் படுகொலை யாழ். குடாநாட்டை மறுபடியும் வன்முறைக் கலாசாரத்தை நோக்கித் திசை திருப்பிவிடும் செயலாகும். இப்படுகொலைச் சம்பவம் தேர்தல் கால வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புபட்ட ஒரு நிகழ்வாகவே தெரியவந்துள்ளது.
மக்களின் வாழ்நிலையில் மாற்றங்களை உருவாக்குவதற்காக நடத்தப்படும் தேர்தலில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் தீயசக்திகளும் போட்டியிடும் செயலானது சமூக விரோதச் சக்திகளுக்கு வேட்பாளர்கள் என்ற அந்தஸ்தைக் கொடுக்கும் ஆபத்து நிறைந்த செயலாகும்.
கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாணவனின் மீது கொலை வெறியாட்டம் நடத்தியவர்கள் வெளிநாடொன்றிலிருந்து வந்தவர் தலைமையில் யாழ். தேர்தல் களத்தில் போட்டியிடும் சுயேச்சைக் குழுவொன்றின் வேட்பாளர்களே என்பது விசாரணைகளின்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடத்தப்பட்டிருந்த மாணவனின் தந்தையாரான வர்த்தகர் திருச்செல்வம் ஏற்கனவே தனது மகனைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு தன்னிடம் வந்திருந்தமையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு எடுத்துக்கூறியதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதச் சக்திகளை பாரபட்சமின்றி நீதி விசாரணைக்குட்படுத்தவேண்டும் என்றும் சட்டம், நீதி, ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டிய பொலிஸார் இதுபோன்ற கொடூரமான செயல்கள் தொடர்ந்தும் நடவாது பாதுகாப்பதற்காகத் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.