2013-2014 ஆண்டிற்கான மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் வரவு-செலவுத்திட்டம் வெறும் இலக்கங்களை கொண்ட ஒரு தாளிப்பாகும். பொதுவாக நவதாராளவாத பொருளாதார கொள்கையை கடைபிடிக்கும் எந்தவொரு முதாளித்துவ அரசாங்கமும் நாளுக்கு நாள் மக்களுடைய நலன்புரி திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை குறைத்து கொண்டு போவதையே அவற்றின் வரவு-செலவு திட்டங்களின் கோட்பாடாக கொண்டுள்ளது. இதற்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் விதிவிலக்கல்ல. அதற்காக இலங்கை மக்களும் மக்கள் சார் அமைப்புகளும் இந்த வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் இருப்பது ஆரோக்கியமானதல்ல.
இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் 2013-2014 ஆண்டிற்கான மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பற்றி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இடைக்கால குழுவின் சார்பாக அதன் அழைப்பாளர்களான இ.தம்பையா, டபிள்யூ. சோமரத்ன ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடபட்டுள்ளதாவது,
இன்றைய தாராளவாத முலதனத்தின் பூகோலமயமாக்கலின் மையமாக விளங்கும் அமேரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமன்றி அதனை வெற்றி கொள்ளபோவதாக கங்கணம் கட்டிக்கொண்டு அதே முதாலாளித்துவ பாதையில் செயற்படும் முன்னாள் சோஷலிச நாடான சீனாவும் கூட பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அதன் விளைவாக அவை மக்கள் நலன்புரி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை அடியோடு கவ்வாத்து செய்து வருகின்றன. அந்த அச்சின் ஈர்ப்பில் செயற்படும் இலங்கை போன்ற ஏகாதிபத்தியத்தில் தங்கி வாழ்கின்ற அரசுகளின் வரவு செலவுத்திட்டம் ஆட்சியாளர்களினதும், ஆளும் வர்க்கத்தினதும் வரவு செலவுத்திட்டமே அன்றி மக்களின் வரவு செலவுத்திட்டமாக இருக்க முடியாது. மஹிந்த சிந்தனை அரசாங்கம் கிராம மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாகவும் ஏகாதிபத்திய தலையீடுகளிலிருந்து சுதந்திரமாக செயற்படுவதாகவும் ஜனரஞ்சக பிரசாரம் செய்து கொண்டு அதன் இருப்பை உறுதி செய்ய முயற்சித்தாலும் இந்த வரவு செலவு திட்டம் அதன் உயர்ந்த பட்ச வங்குரோத்துதனத்தை மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
இன ஒடுக்கலினாலும் அதனடிப்படையிலான பொருளாதார திட்டங்களினாலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் தமிழ் , முஸ்லீம் , மலையகத்தமிழ் தேசிய இனங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தினால் மேலும் பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். பொதுவாக சிங்கள தேசிய இனத்தையும் பாதிக்கும் பொருளாதார திட்டத்தின் அடிப்படையிலான இந்த வரவு செலவுத்திட்டத்தினை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு வசதியான தேசிய இன மேலாதிக்க வெறியை சிங்கள மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் ஊட்டத்தவறாது. இந்த போதையிலிருந்து சிங்கள மக்களும் விலகி யாதார்த்தத்தை புரிந்துகொண்டு இந்த வரவு செலவுத்திட்டம் ஏனைய தேசிய இனங்களை குறிப்பாக பாதித்தாலும் தங்களையும் பொதுவாக பாதிக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென்று எமது கேந்திரம் வேண்டுகோள் விடுக்கின்றது.
அத்துடன், இன்றைய பழமைவாத, முதாலாளித்துவ அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் மீதான விமர்சனங்களை சரியாக புரிந்து கொண்டு இத்திட்டத்தினால் பாதிக்கப்படும் சகல மக்களும் ஒன்றிணைந்து அரசாங்க மாற்றத்துக்காக மட்டுமன்றி முழுமையான மாற்று அரசுக்காக போராடும்படி அறைகூவல் விடுக்கிறது.
அழைப்பாளர்கள்
இ.தம்பையா
டபிள்யூ.சோமரத்ன.
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்