Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மஹிந்த இந்தியாவில் சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறார் இங்கோ சகிக்க முடியாதவை நடக்கிறது

பகைமையும், வெறுப்புணர்வும் வன்முறைக்கு எம்மை இட்டு செல்வதால் சகிப்புத்தன்மையே இன்றைய தேவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் வைத்து கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சென்று மத்திய பிரதேச சாஞ்சி நகரில் பெளத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு அவர் இந்த மகத்தான கருத்துகள் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் இதை இந்தியாவில் சொல்லிக்கொண்டிருந்த அதேவேளையில் அவரது இராணுவத்தின் புலனாய்வுதுறை நபர்கள் முல்லைத்தீவில் நாம் நடத்திகொண்டிருந்த ஜனநாயக போராட்டத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புடன் கூடிய வன்முறை தாக்குதல்களை நடத்தினார்கள்.

இந்த குற்றச்சாட்டை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பொறுப்புடன் நான் முன் வைக்கின்றேன். என்னுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெருந்தொகையானோரும் இதற்கு கண்கண்ட சாட்சியாக இருக்கின்றார்கள். முதல் தாக்குதல் நடத்திய நபரை என்னால் அடையாளம் காட்ட முடியும்.

இந்நிலையில் இங்கே யாருடைய உத்தரவின் பேரில், சகிப்புத்தன்மை மறைந்து வெறுப்பும், வன்முறையும் தலைதூக்கியது என இந்த அரசாங்கத்தை நான் கேட்க விரும்புகிறேன், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட தமிழ் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

தமிழ் கட்சிகள் மீதான இத்தகைய இராணுவ புலனாய்வுதுறை தாக்குதல்கள் தொடந்து நடைபெறுகின்றன. இது முதன்முறையுமல்ல. கடைசி முறையாகவும் இருக்க போவதில்லை. ஜனநாயக அஹிம்சா போராட்டங்களை சகித்துகொள்ளமுடியாமலேயே இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இடதுசாரி முன்னணி ஆகியவை இணைந்து முல்லைத்தீவு கோப்பாபிலவு மக்களை சேர்த்துக்கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கிராமத்தின் அப்பாவி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தும்படியும், அந்த பிரதேசத்தில் சுமார் 2 ,500 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பாரிய இராணுவ முகாம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படியும் நாம் கோஷங்களை ஜனநாயக வரம்புக்குள் நின்று எழுப்பினோம்.

கோஷங்களை எழுப்பி, கட்சித்தலைவர்கள் உரையாடிகொண்டிருந்த வேளையில் எம்மீது மாட்டு சாணத்தையும், கழிவு எண்ணெயையும் கலந்து தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் நமது ஜனாநாயக ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்த வேளையில் அந்த இடத்துக்கு வந்த புலனாய்வுதுறை நபர்கள், அசிங்கமாக ஊளையிட்டு கூச்சல் எழுப்பி பதட்ட நிலைமையை ஏற்படுத்த முயன்றார்கள்.

அதன்பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவம் தேராவில் இராணுவ முகாமுக்கு நேர் எதிரில் நடைபெற்றுள்ளது. அதேபோல் இக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் செல்வராஜாவின் வாகனமும், அவரது வாகனத்தை துரத்தி வந்த மோட்டார் சைக்கள்தாரிகளால், முள்ளியவளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் தொடர்பில் உரிய காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் எவரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்டன என்பதை அறியும் தேவை எங்களுக்கு இருக்கின்றது.

இந்த தாக்குதல்கள் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வேளையில் நாட்டின் ஜனாதிபதி இந்திய மண்ணில் இருந்து தெரிவித்த மகத்தான கருத்துகள் எம்மை பரவசப்படுத்துகின்றன. மகாத்மா காந்தியையும், டாக்டர் அம்பேத்கரையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்கள் சொல்லி சென்ற அஹிம்சை, சமாதானம், பரிவு ஆகியவை உள்ளடங்கிய உன்னத செய்திகள் இன்று நாம் உலகெங்கும் எடுத்து செல்ல வேண்டும் என அவர் காந்தியின் மண்ணில் இருந்து கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கோரிக்கையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவரது இராணுவத்தினர் ஜனாதிபதி சொன்ன கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ளார்களா, என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நேற்று நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து நாம் எமது ஜனநாயக போராட்டங்களை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. அவை தொடந்து முன்னெடுக்கப்படபோகின்றன. எனவே எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் இலங்கை இராணுவமே பதில் சொல்ல வேண்டும்.

Exit mobile version