04.01.2009.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணிவரும் இந்திய உயர்ஸ்தானிகர், இந்தியாவின் நலனுக்கு எதிராகச் செயற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முறைப்பாடொன்றை இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை மீண்டும் நாட்டுக்கு அழைக்குமாறு கோரி முறைப்பாட்டுப் பிரதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.
இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்காமை, அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் மீது அதிருப்தியடைந்திருக்கும் தமிழக கட்சிகள், அவரை நாட்டுக்கு மீள அழைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பரந்தன் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை விடுதலைப் புலிகளிடமிருந்து, இலங்கை இராணுவம் மீட்டிருப்பது அலோக் பிரசாத் மீதான தமிழக கட்சிகளின் அதிருப்தியை மேலும் அதிகப்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.