Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘மஹிந்தவின் மூத்த புதல்வருக்குசேறடிப்பு” செய்தி தொடர்பான தெளிவுபடுத்தல்:LANKA NEWS WEB

‘மஹிந்தவின் மூத்த புதல்வருக்கு வவுனியா முகாமில் மக்கள் கல்வீச்சு மற்றும் சேறடிப்பு” செய்தி தொடர்பான தெளிவுபடுத்தல்: LANKA  NEWS WEB 
 
 
  11.07.2009ம் திகதியன்று இலங்கை நேரப்படி இரவு 7 மணியளவில் எமது இணையத்தளத்தில் மேற்குறிப்பிட்ட தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தி, உண்மைக்குப் புறம்பானதென பரப்புரை செய்வதற்கு குழுவொன்று திட்டமிட்டு, முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தச் செய்தியுடன் பிரசுரிக்கப்பட்ட நாமல் ராஜபக்சவின் புகைப்படம், வவுனியா முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது அல்லவெனவும், அதனடிப்படையில் இந்தச் செய்தி பொய்யான தகவல் எனக் கூறுவதற்கும் அந்தக் குழு முயற்சித்து வருகின்றது.

அத்துடன், குறித்த செய்தி பொய்யானது என்று விமர்சிக்கும் வகையிலான தகவல்களை மின்னஞ்சல் மூலம் சங்கிலித் தொடராக அந்தக் குழு அனுப்பி வருகின்றது.
 
  நாங்கள் செய்திகள் வெளியிடும்போது, அதனுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் வெளியிடவே முயற்சித்து வருகின்றோம். எனினும், இலங்கைக்கு வெளியிலிருந்து செயற்படும் எம்மால் செய்திகளுடன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை உடனடியாக பெற்றுக்கொள்வது சகல சந்தர்ப்பங்களிலும் சாத்தியமாவதில்லை. இதனால், செய்தியுடன் தொடர்புடைய அல்லது அதற்குப் பொருத்தமான வைப்பகப் படங்களையே நாம் பயன்படுத்தி வருகின்றோம்.
இதனடிப்படையில், ஜனாதிபதியின் புதல்வர் மீது வவுனியா முகாமில் மேற்கொண்ட தாக்குதல் சம்பந்தமான செய்தியுடன் நாம் வெளியிட்ட புகைப்படம், அந்தச் செய்தியுடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதையும் அது வைப்பகப் படம் என்பதையும் இத்தருணத்தில் அறியத்தருகின்றோம்.

அன்றைய தினம் செய்தி வெளியிடப்பட்டபோது, அந்தப் புகைப்படத்தை எங்கிருந்து பெற்றுக்கொண்டோம் அல்லது அதற்கான ஆதராத்தை வெளியிடத் தவறிவிட்டதை எமது தவறாகக் கருதுகிறோம். இதற்காக நாம் வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.

எனினும், இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட செய்தி என்பதை தற்போதும் நிச்சயமாகக் கூறுகின்றோம்.

இந்தச் சம்பவத்தின் பின்னர், ஜனாதிபதியின் புதல்வர் தம்முடன் சென்ற ஊடகவியலாளர்களிடமிருந்த கெமராக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துள்ளதாகவும் இலங்கையில் எந்த ஊடகத்திலும் இந்தச் செய்தி வெளியாகவில்லை என்பதையும் நாங்கள் தெளிவாக எமது செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

எனவே, நாங்கள் வெளியிட்ட செய்தி ஆதாரபுர்வமானது என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமல்லாது, ஜனாதிபதியின் புதல்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது அவரது நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டமைக்கும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக்கொண்டமைக்கும் ஆதாரங்கள் உள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

ஆகவே, எமக்குக் கிடைத்துள்ள தகவல் மிகவும் உறுதியானது என்பதையும், அன்றைய தினம் நாம் வெளியிட்ட செய்தி ஆதாரபு ர்வமானது என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறுகின்றோம்.-LANKA  NEWS WEB.

Exit mobile version