11.04.2009.
வவுனியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் நிவாரண நிலையங்களின் கொட்டில்களில் மழைநீர் புகுந்திருப்பதனால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள்.வவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் இருந்த கொட்டில்களில் தங்கியிருந்த 200 பாதிக்கப்பட்ட குடும்பங்களை மனிக் பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்திற்கு இடம் மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மழை காரணமாக கொட்டில்களில் நீர் புகுந்ததையடுத்து, இந்தக் குடும்பங்கள் அனைத்தும் பாடசாலை மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இடநெருக்கடி காரணமாக அந்த மக்கள் இரவு முழுதும் படுப்பதற்கு இடமின்றி நிலத்தில் நெருக்கமாக அமர்ந்த வண்ணமே இரவைக் கழித்ததாகத் தெரிவிக்கப்படுகினறது.
இதேபோன்று சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மழை காரணமாக, இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலைமை தொடர்பாக வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் அதிகாரிகள் கூடி விரிவாக நேற்று ஆராய்ந்துள்ளனர்.