மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், அச்சங்கத்தின் நுவரெலிய பிராந்திய செயலாளர் எஸ். சிவகுமார், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இடையேற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சு. விஜயகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்படி நடவடிக்கை குழு தாபிக்கப்பட்டது.
ஹட்டனில் நடைபெற்ற முதலாவது கலந்துரையாடலிலும் பண்டாரவளையில் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடலிலும் கலந்து கொண்ட அமைப்புகள், தனிநபர்கள் மத்தியிலிருந்து இவ்வமைப்பிற்கு அங்குரார்ப்பண அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டது.
அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. இதனை மேலும் விரிவுபடுத்தி மேலும் புதியவர்களை ஒருங்கிணை குழுவில் இணைத்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளர்களாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜா, லியோ மார்கா ஆஸ்ரம தலைவர் பிதா கை டி பொன்ட்காலன்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
அத்தோடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வலியுறுத்தி கவனஈர்ப்பு நடவடிக்கைகளை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை குழு பின்வரும் விடயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டன.
• காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவானது காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கையை முன்வைத்து, பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை அமைப்பாக இயங்கும். அமைப்புகளும் தனி நபர்களும் தனித் தனியாக சுதந்திரமாக அவரவரது நிலைப்பாட்டிலிருந்து கொண்டு காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை இந்த நடவடிக்கை குழுவினூடாக முன்னெடுக்கலாம்.
• ஒவ்வொரு அமைப்பிலிருந்து குறைந்தது ஒருவரும், தனிநபர்கள் ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்குழுவின் அங்கத்தவராகலாம். அங்கத்தவர்களில் இருந்து ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யப்பட்டு விரிவுப்படுத்தப்படும்.
• குழுவுக்கு தேவையான நிதியை அங்கத்துவ அமைப்புகளிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் சுய விருப்பின் பேரில் கிரமமாகவும் பொது மக்களிடம் இருந்தும் நலன்விரும்பிகளிடமிந்தும் பெற்றுக்கொள்வது.
மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக பின்வருவன தொடர்பாகவும் இணக்கம் காணப்பட்டன.
• மலையக மக்களின் காணி, வீட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை தோட்டக் குடியிருப்புகளில் இருந்து தொழிலாளர்கள், சேவையாளர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த வித அடிப்படையிலும் வெளியேற்றப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
• பெருந்தோட்டங்களில் உள்ள லயன் முறை ஒழிக்கப்பட்டு அவற்றில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீடில்லா ஏனைய குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டுவதற்கு உகந்த பெருந்தோட்டக் காணிகளில் இருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்.
• வீடுகளை கட்டிக் கொள்வதற்கு தேவையான நிதி, கட்டுமான பொருட்களையும் வீடமைப்பு அதிகார சபை போன்ற அரசாங்க நிறுவனங்களினூடாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தேவையினை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கென சாதாரண, இலகு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
• வீடுகளை கட்டிக் கொள்வதற்கான மேற்படி காணிகள் குறித்த ஒரு தோட்டத்தினுள் அல்லது பல தோட்டங்களின் எல்லைகளில் ஓரிடத்தில் வழங்கப்படலாம்.
• பெருந்தோட்டங்களில் தற்போதிருக்கும் தனி வீடுகள், இரட்டை வீடுகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் காணியின் பரப்பளவு உள்ளடங்களாக ஒவ்வொரு வீட்டுக்கும் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.
• வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்பில் இருக்கும் காணிகளில் கட்டப்பட்டுள்ள தோட்ட வீடுகளுக்கு உறுதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
• ஏற்படுத்தப்படும் குடியிருப்புகள் உள்ளூராட்சி சபைகளுக்கு கீழான அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளாக்கப்பட்டு, வீதி, நீர், மின் சக்தி, வைத்தியசாலை, மைதானம், வாசிகசாலை, சனசமூக நிலையம், வழிபாட்டு இடங்கள் உட்பட வசிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
• வீடுகளைக் கட்டிக் கொள்வதறகான 20 பேர்ச்சஸ் காணியை விட பயிர் செய்கை, பண்ணை போன்றவற்றை செய்யவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.
மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவுடன் கலந்துரையாடுவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கு இல. 152-1/4, புதுக்கடை வீதி, கொழும்பு 12 என்ற முகவரியுடன் அல்லது plantationcagroup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் அல்லது 0714302909, 0772739211, 0776485411 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்டுத்த முடியும்.