Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகம் : தமிழர் வீடுகள் தீக்கிரை

இரத்தினபுரி, நிவித்திகலைப் பொலிஸ் பிரிவிலுள்ள தோட்டம் ஒன்றில் தமிழர்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிவித்திகலையிலுள்ள தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினக் காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டன எனவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. குக்குலகல பகுதியிலுள்ள பெரும்பான்மையினத் தோட்டக்காவலர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதைத்தொடர்ந்து அவர் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்திலுள்ள தமிழர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த தோட்டத்தின் மேற்பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்புச் சம்பவமொன்றில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்தே தமிழர்களின் இரண்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனையடுத்து தோட்டங்களைச் சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. இந்த நிலையில் பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version