Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலையகத் தோட்டங்களில் ‘நவீன அடிமைமுறை’

upcountryஉலகில் நவீன அடிமை முறைகளில் ஒன்றான கட்டாயப்படுத்தி வேலைவாங்கும் தொழில் முறைகளை ஒழிப்பதற்காக உலகநாடுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் அரசுகள் கைச்சாத்திட வேண்டும் என்று அடிமைத்தனம், குடியேறிகள் மற்றும் மனிதக் கடத்தல்கள் தொடர்பாக ஆராயும் ஐநாவின் சுயாதீன நிபுணர்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

உலகில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என சுமார் இரண்டு கோடிப்பேர் கட்டாய வேலைவாங்கல் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.

‘லாபங்களும் வறுமையும்: கட்டாய தொழிலின் பொருளாதாரம்’ என்ற பெயரில் ஐஎல்ஓ என்ற சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் இந்தவாரம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களில், ஏற்கனவே மதிப்பிடப்பட்டதை விடவும் மூன்று மடங்கு அதிகமாக, அதாவது ஆண்டுக்கு சுமார் 150 பில்லியன் டாலர்கள் கட்டாய வேலைவாங்கல் முறைகள் மூலம் லாபம் ஈட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரும் மே 28-ம் திகதி நடக்கவுள்ள உலக தொழிலாளர் மாநாட்டில், அரசுகளை சட்டப்படி நிர்ப்பந்திக்கும் உடன்படிக்கை ஒன்றுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி ஐஎல்ஓவின் உறுப்புநாடுகளை மனித உரிமை ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத் தோட்டங்களில் ‘நவீன அடிமைமுறை’

இந்த நிலைமையில், இலங்கையில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இன்றளவும் நவீன அடிமைமுறைகள் நீடிப்பதாக சமூக ஆர்வலர்களும் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நூற்றாண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்புகள், அவர்களுக்கு சொந்தமாக்கப்படாத சூழ்நிலையை தோட்டக் கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இ. தம்பையா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தோட்டக் கம்பனிகள் தமது நிர்ப்பந்தங்களுக்கு கட்டுப்படாத தொழிலாளர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுகின்ற போக்கு பல தோட்டங்களில் இன்னும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத் தோட்டமொன்றில், ’30 நாட்களும் வேலைசெய்ய தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதற்கு முடியாதபோது தோட்டக் காவலாளிகளை வைத்து தொழிலாளர்களைத் தாக்குகின்ற சூழ்நிலையும் காணப்படுகின்றது’ என்றார் வழக்கறிஞர் தம்பையா.

தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டுசெல்லமுடியாத முடியாதவிதத்தில் தோட்டக் கம்பனிகள் மலையகத் தொழிற்சங்கங்களை முடக்கி வைத்திருப்பதாகவும் வழக்கறிஞர் தம்பையா கூறினார்.

Exit mobile version