மலையக இளைஞர்கள் சிலர் புலிகளிடம் பயிற்சி பெற்றுள்ளனர் எனப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட நீடிப்புப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றுகையில், கிளிநொச்சியில் வைத்துப் புலிகள் மலையக இளைஞர்கள் சிலருக்கு கொரில்லாத் தாக்குதல் பயிற்சிகளும் ஆயுதப் பயிறிசிகளும் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்திருக்கிறார். அவசரகால சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அவசரத்தில் பிரதமர் மலையக இளைஞர்கள் குறித்து இவ்வாறான பாரதூரமானதொரு குற்றச்சாட்டினைத் தெரிவித்திருப்பது குறித்து மலையக அரசியல் தலைமைகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
பிரதமர் இவ்வாறான குற்றச்சாட்டினை தெரிவித்து வருகின்ற நிலையில் மலையகத் தலைமைகள் அது குறித்து கவலை கொள்ளாதது மட்டுமன்றி, மகிந்த ராஜபக்ஷவையும் அவரது கட்சியையும் தாங்கள் தொடந்து ஆதரித்து வருவதாகவும் அதனால் அரசு தங்களுக்கு உரிய அந்தஸ்தினை வழங்கும் வகையில் “உரிய பதவி” யை வழங்க வேண்டும் எனவும் கோரியிருக்கின்றனர். ‘உரிய பதவி” என்பது அமைச்சர் பதிவயை. இவ்வாறு அமைச்சர் பதவியைக் கோரியிருப்பவர்கள் மலையக மக்கள் முன்னணியினரே. இவ்வாறு ‘உரிய பதவி” ஒன்றை இவர்கள் கோரியிருப்பது தொடர்ந்தும் மக்களுக்குச் சேவை செய்யவே என அரசியல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
இச்செய்தி ஒளிபரப்பைத் தொடர்ந்து மலையகத்தில் பாடசாலை ஒன்றில் அதிபரும் மூன்று ஆசிரியர்களும் சிங்கள மொழி மூலமானவர்களாக இருப்பது குறித்தும் அதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பாடசாலையின் பெற்றோர்கள் விளக்கிக் கூறிய செய்தியொன்றும் ஒளிபரப்பாகியது.
மலையக அரசியல் தலைமைகள் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட பின்னர் மக்கள் எதிhநோக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேச முடியாத ஒரு நிலை தோன்றியிருக்கிறது. அதிகரித்து வரும் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக கோதுமை மாவின் விலையேற்றம், சம்பள உயர்வுகள் வழங்கப்படாமை குறித்து மலையக மக்களிடையே பெரும் அதிருப்தியும் எதிர்புணர்வும் தோன்றியிருக்கிறது. இது குறித்து தென்னிலங்கையில் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற் சங்கங்களும், அரசியற் கட்சிகளும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
ஆயினும் மலையகத் தலைமைகள் மானிய அடிப்படையில் கோதுமை மாவினை வழங்க வேண்டும் எனப் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்து விட்டு தங்களது சொந்த அரசியல் பணிகளில் மூழ்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.