Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலேஷியத் தூதரிடம் திருமா மனு.

மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்பாக திருமா வெளியிட்டுள்ள அறிக்கை,மலேசியாவில் ஈழத் தமிழர்கள் மொத்தம் 75 பேர் பினாங்கு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிங்கள இனவெறியர்களின் வதைக்குள்ளாகி, ஆனந்தக்குமாரசாமி முகாம் மற்றும் அருணாசலம் முகாம் ஆகிய முகாம்களிலிருந்து வன்னிப் பகுதிக்கு மீள் குடியேற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்டவர்கள் எனத் தெரிகிறது. வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் மீள்குடியேற்றத்திற்கான எத்தகைய அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் “அம்போ’வென விடப்பட்டிருக்கிறார்கள். அவரவர் சொந்த கிராமங்களுக்குச் சென்று குடியேறுவதற்கு அங்கே கிராமங்களுமில்லை; கிராமங்கள் இருந்ததற்கான வடுக்களும் இல்லை. சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் வன்னியில் தமது இராணுவ முகாம்களை நிலைகொள்ளச் செய்து பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கே ஒரு குடிசை அமைத்து முடங்கிக்கொள்ளலாம் என்று எண்ணுவதற்குக்கூட இயலாத நிலை உள்ளது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் எங்கோ ஒரு தேசத்தில் அகதிகளாய் அடைக்கலம் ஆகலாம் என்னும் மனநிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் கடந்த 19-4-2010 அன்று ஒரு படகின் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 75 பேர் மலேசியாவை நோக்கிப் பயணம் செய்துள்ளனர். சிங்கள இனவெறியர்களிடமிருந்து தப்பித்து உயிர்பிழைத்தால் போதும் என்னும் மனநிலையில், அயல்நாட்டாரின் கருணை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் பயணித்துள்ளனர். எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலில் அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகி பாதியிலேயே நின்றுபோயுள்ளது. அது ஒரு சாதாரணப் படகு என்பதனால் எந்த நேரத்திலும் கடலில் மூழ்கலாம் என்கிற ஆபத்து இருந்தது. இந்த நிலையில் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென அவர்கள் நடுக்கடலில் இருந்தபடியே உலக நாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கோரிக்கை வைத்துக் கதறியிருக்கின்றனர். கடந்த 23Š4Š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இத்தகவல் எட்டியது. அதனடிப்படையில் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியதுடன் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆறுதல்படுத்தியிருக்கிறோம். அத்துடன் அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்து அவர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு உதவ வேண்டுமென மலேசியாவைச் சேர்ந்த அமைப்புகளைத் தொடர்புகொண்டு வேண்டுகோள் வைத்தோம்.

தற்போது அவர்களைக் கைது செய்துள்ள மலேசிய அரசு அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி விடுவார்களோ என்கிற பேரச்சம் உலகத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை கருணை உள்ளத்தோடு அகதிகளாய் ஏற்று அடைக்கலம் அளிக்க வேண்டும். மாறாக, இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் அது ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாக அமையும். எனவே தமிழக அரசும், இந்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு அவர்களை மலேசியாவிலேயே தங்கச் செய்வதற்கு மலேசிய அரசை வற்புறுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான கோரிக்கை விண்ணப்பத்தினை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தமிழகத்திலுள்ள மலேசியத் தூதரகத்தில் சமர்ப்பிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் திருமா.

Exit mobile version