பிரித்தானியாவில் மக்கள் நீண்ட போராட்டங்களூடாகப் பெற்றுக்கொண்ட உரிமைகள் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மீள முடியாத முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள பிரித்தானியாவும் ஏனைய ஏகபோக நாடுகளும் மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் போன்ற துறைகளையும் அழித்துவருகின்றன. சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்குக் காத்திருந்த நோயாளிகளின் தொகை கடந்த வருடம் இதே காலப்பகுதியுடன் ஒப்புநோக்கும் போது கால் மில்லியனால் அதிகரித்துள்ளது என அரச மருத்துவமனைகள் குறித்து இன்று வெளியான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அரச மருத்துவத் துறையின் பல கூறுகளைக்கூட தனியார்மயமாக்கியுள்ள பிரித்தானிய அரசு பல்தேசிய நிறுவனங்களால் வழி நடத்தப்படுகின்றது. பிரித்தானியாவை ஆளும் பழமைவாதக் கட்சியின் சிறுபான்மைக் கூட்டரசாங்கம் மக்களிடமிருந்து உழைப்பை மலிவான விலையில் அபகரித்துக்கொண்டு பல்தேசிய நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பைச் செய்துவருகின்றது. மருத்துவ மனைகளை நடத்துவதற்குப் பண வசதி இல்லை என்றும் மக்களை ஒத்துழைக்குமாறும் கூறிவரும் அதிகார வர்க்கம் கூகிள், அமசோன், கோஸ்டா போன்ற பெரு நிறுவனங்களிடமிருந்து பில்லியன் கணக்கில் அறவிட வேண்டிய வரித் தொகையைக் கண்டுகொள்ளவில்லை.