முறையாக மருத்துவ விசா பெற்று மலேஷியாவில் இருந்து சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை சென்னை விமான நிலைய அதிகாரிகள் வந்த விமானத்திலேயே தரையிரங்க விடாமல் திருப்பி அனுப்பினார்கள். இத்தொடர்பு இந்திய மத்திய மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது. இது தொடர்பாக பேசிய கருணாநிதி கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 2003 மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் மூலமாகவே பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்கட்சித் தலைவர்களுக்கு பதிலளித்த கருணாநிதி ‘’பார்வதியம்மாள் தனக்கு சிகிச்சை வேண்டி கடிதம் எழுதினால் அதை பரீசிலித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுத தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்” இந்நிலையில் மலேஷியாவில் தங்கியிருக்கும் பார்வதியம்மாள் மனிதம் அறக்கட்டளை அக்னி சுப்பிரமணியன் மூலமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அக்கடிதத்தில் பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனக்கு முசிறியில் உள்ள மருத்துவர் இராஜேந்திரனிடம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உதவியாக திருச்சி செல்வதற்கான வீசா வழங்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நிலையான சிந்தனைத் தொடர் இல்லாத பார்வதியம்மாள் அக்கடிதத்தில் கைநாட்டு இட்டு இருப்பதாகவும். பிரபாகரனின் சகோதரி விநோதினி எழுதிய முதல் கடிதத்தை தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் பார்வதியம்மாளாலேயே எழுதபப்ட்டிருக்கும் இரண்டாவது கடிதம் இது என்றும் சொல்லப்படுகிறது. இக் கடிதத்திற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வார். கடிதம் எழுதுவாரா? அல்லது வழக்கம் போல வசன நடையில் கபடி ஆடுவாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இச்செய்தியை நமது சென்னை நிருபர் மேலதிக தகலவகளுடன் நாளை உறுதியளிப்பார்.