Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரி கொல்வினின் மரணத்தின் பின்புலத்தில் ..

வன்னிப் படுகொலைகளை வெளியுலகிற்கு செய்தியாகச் சொன்ன ஊடகவியலாளர் மரி கொல்வின் இன்று(22.02.2012) கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர்களுள் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவரான மரி, சிரியாவில் இன்று கொலைசெய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கில் எண்ணை வளங்களைக் கொள்ளையிடுவதற்காக சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்திய அமரிக்க அணி அதே சர்வாதிகாரிகள் அமரிக்காவிற்கு எதிரான அணிகளோடு சமரசம் செய்துகொள்ள முற்பட்ட போது அந்த நாடுகளின் மீது இராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. லிபிய மக்களினதும் ஆபிரிக்க மக்களதும் அபிமானத்தைப் பெற்றிருந்த கடாபியையும் இவ்வாறே அமரிக்கா கொன்றொழித்தது.

சவுதி அரேபியா, பஹ்ரெயின் போன்ற நாடுகள் அமரிக்காவிற்கு ஆதரவானவை. சிரியாவில் மக்கள் கொலைசெய்யப்படுவதற்கும் அதிகமாக பஹ்ரெயினில் மக்கள் கொல்லப்படுகின்றனர். பஹ்ரெயினில் வழிந்தோடும் இரத்த ஆறு குறித்து மேற்கின் ஊடகங்கள் மூலையில் கூட செய்திகள் வெளியிடுவதில்லை. ஒப்பீட்டளவில் சிரிய நாட்டில் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளை விட மக்களுக்குச் சுதந்திரம் காணப்பட்டது. சிரியா அமரிக்க அணிக்கு எதிரான நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்ட போது, அமரிக்கா , சிரிய நாட்டினுள் இஸ்லாமிய அடிப்படை வாத பயங்கரவாதக் குழுக்களை அனுப்பியது. இவர்களோடு இணைந்த கிளர்ச்சிக் குழுக்களும், ஜனாதிபதி ஆசாத்தின் சர்வாதிகார ஆட்சியில் வெறுப்புற்றோரும் இணைந்து அங்கு கிளர்ச்சிகளும் பயங்கரவாத நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

மூழ்கி அழிந்து கொண்டிருக்கும் அமரிக்க ஏகாதிபத்தியத்தை மறுபடி தூக்கி நிறுத்துவதற்காக மத்திய கிழக்கு மக்களின் மரணக் கிடங்கிலிருந்து எண்ணையை உறிஞ்ச அமரிக்கா தயாராகிவிட்டது.

அமரிக்கா உருவாக்கிய சர்வாதிகார ஆட்சிக்கும் அமரிக்கா உருவாக்கிய பயங்கரவாதக் கிளர்ச்சிகளுக்கும் இடையில் நசுங்கி மாண்டுபோன மரி கொல்வின் துணிகரமான ஊடகவியளாளர்.

ஊடகவியலின் புத்தெழுச்சி என்பது போராட்டங்கள் ஊடாக முன்னெழுந்த எம்மைப்போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்தே உருவாக முடியும். இவ்வாறான புதிய உருவாக்கத்தில் மரி கொல்வின் போன்றவர்கள் செய்திகளையும் அவை சொல்லும் அரசியலையும் எதிர்காலத்தில் மக்களுக்காக விட்டுச் செல்வார்கள்.

Exit mobile version