எனக்கு நன்றாக வாழப் பிடிக்கும். எனது கனவெல்லாம் நன்கு படித்து உங்களைப் போல் (அதிகமாக இதைப் படிப்போர் மேற்கத்தைய நாடுகளில் குடும்பம் குட்டியென வாழ்வோர்) நன்றாக உழைத்து எனது தம்பி தங்கைகளை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். எனது சொந்தங்கள் சிலர் சமாதான காலத்தில் இங்கு வந்த போது என் வயதொத்தவர்களைப் பார்க்கும் போது ஏங்குவேன். அவர்கள் கொடுத்த முக்கால் பான்ட் , சட்டைகள் எனக்கு நிறைய பிடிக்கும்.
எனது அப்பா சமாதான காலத்திற்கு முன் புலிகளுக்கு சில வேலைகளைச் செய்யத் தொடங்கினார். ஏனெனில் தோட்ட வருமானம் சரிவரக் கிடைக்காமையால் அப்போதெல்லாம் எனது அம்மா இது சரி வராது என எச்சரிக்கை செய்தார். அதற்கு அப்பா சொல்வார், ‘எங்களுக்கு இரண்டு பக்கமும் இடி. நாங்கள் என்ன செய்வது? வன்னியை விட்டு வெளியேறுவது சாதாரண விடயமில்லை! வெளியேறி எங்கு செல்வது? வசதியானவர்கள் கொழும்பில் வாழ்கிறார்கள். அல்லது வெளிநாடு சென்று விடுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்?’
நானும் குடும்ப சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நன்றாகப் படித்தேன். எனக்கு மிகப் பிடித்த பாடம் கணிதமும் விஞ்ஞானமுமே ஆகும். ஆனால் பெற்றோல் ஏற்றிக் கொண்டு போன எனது அப்பாவையும் வேறு சிலரையும் ஆழ ஊடுருவும் படை வைத்த வெடிகுண்டு வெடித்து சிதறடித்தது. அவரது உடல் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை.. அம்மாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கதறி அழுதார். நானும் தம்பி தங்கைகளும் திகைத்து நின்றோம். ஓரளவிற்கு சிந்திக்க தலைப்பட்டேன். ஏன்? எதற்காக? முடிவு?……..
அம்மாவிடம் நான் புலிகளல் இணையப் போவதாக கூறினேன். வழமையான அம்மாவாக கதறினார். நான் உறுதியாக நின்று இணைந்தேன். பயிற்சி கடுமையாக இருந்தது. பல இளைஞர் யுவதிகள் பலவந்தமாக இணைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். பயிற்சியின் கடுமை உங்களிற் பலருக்கு தெரியும். எண்பதுகளில் நீங்கள் எடுத்த பயிற்சியை விட கடினமானது. கடல் , நிலம் , காடு என பலவகைப் பயிற்சி.
போர் தொடங்கியது. களமுனைக்கு அனுப்பப்பட்டோம். பலர் கொல்லப்பட்டனர். சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டேன். இப்பொழுது அரச படையினரின் கை மேல் ஓங்கியுள்ளது. ஏனெனில் அவர்கள் ஆயுதம் , ஆட்கள் இரண்டிலும் எங்களை விட பல மடங்குகள் நிறைவாக இருந்தனர். மேலும் விமானப் படை எங்களை துவம்சம் செய்தது. நாங்கள் நினைப்பதற்கு முன் அவர்கள் முடித்து விடுகின்றனர். எங்கள் நிலைகளை இலக்கு வைத்து அடித்தார்கள். எங்களிடம் அவர்களை விட பலமடங்கு அதிகமாக இருந்த மன பலம் மெல்ல மெல்ல குறைந்தது.
தந்திரோபாயங்கள் அற்று சண்டை புரிந்தோம். எங்களுக்குள் முரண்பாடுகள் தோன்றின. முன்பே பல முரண்பாடுகள் இருந்ததை பயிற்சியின் போது அவ்வப்போது மிக இரகசியமான முறையில்
எனதருமை சொந்தங்களே!
பலர் எங்களின் நடவடிக்கைகளில் குற்றம் கூறுகிறீர்கள். எண்மைதான். எனது தலைமை தந்திரோபாயமற்ற ஒரு போராட்டத்தையே நடத்தியதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேறு . எமது தலைமை வேறு என்பதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்னால் என்ன செய்ய முடியும்? எனது நிலையில் உங்கள் மகளை அல்லது மகனை ஒப்பிட்டுப்பாருங்கள். எனது தகப்பனார் உங்களை மாதிரி வெளிநாட்டிற்கு வந்திருந்தால் நானும் இப்போது நல்ல கல்லூரியில் ஏன் பல்கலைக்கழகத்திற்கு கூட போயிருப்பேன்.
புலிகளின் இருப்பிற்கு யார் காரணம் என்பதில் இருந்து பிரச்சனைகளைப் பாருங்கள். அதை விடுத்து இறந்து போன எங்களைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் பிரபாகரனால் நீங்கள் துரத்தப்படுவதற்கு முன் இறந்து போன உங்கள் தோழர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக இல்லை இல்லை இலங்கை வாழ் அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக (நீங்கள் பல் தேசியவாதிகள்) குரல் கொடுத்து அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த உங்களால் எனது குடும்பம் எங்கிருக்கின்றது என கண்டு பிடித்து தர முடியுமா? அல்லது வன்னியில் உங்களை சுயாதீனமாக உலாவ விடுவார்களா?
எனக்கு முன் இருந்த ஒரே வழி புலியில் இணைந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்வதேயாகும்! எனது அனுபவம் இதற்கு மேல் சிந்திக்க இடம் தரவில்லை. ஆனால் தொடர்ச்சியான சிந்தனை மூலம் நீங்கள் சொல்வது என்னவென்றால் ஓரளவு பிரச்சனை இருந்த காலத்தில் போராடத் தொடங்கிய நீங்கள் பிரச்சனைகள் முற்றிய இந்தக் காலத்தில் போராடத் தேவையில்லை என கூறுகிறீர்கள்.
எமது வாழ்க்கை நிர்மூலமானதற்கு நீங்களும் ஒரு பகுதி என்பதை மறைத்து இப்போது இனப்பிரச்சனை இல்லை எனவும் அங்கு மக்கள் நன்றாக வாழ முடியும் எனக் கூறும் நீங்கள் எம்மக்களின் இறப்பினால் கிடைத்த வெளிநாட்டு செல்வத்தை வைத்து இங்கும் வந்து வாழப் போகின்றீர்கள். அதற்கு உங்களுக்கு அரசின் ஆதரவும் உண்டு. மறந்து விடாதீர்கள் இந்த அரச ஆதரவு சில காலங்களுக்கு மட்டுமே!
நிறைய எழுத மனம் துடிக்கி;றது. என்ன செய்வது? உங்கள் குழந்தைகள் படிக்க நல்ல பாடசாலைகள் தேடித் திரிகிறீர்கள். இதைப் படிப்பீர்களா தெரியவில்லை. அடிக்கடி இங்கு விடுமுறை கழிக்க வாருங்கள். உண்மைமையக் கண்டறியுங்கள். சிங்கள சக்திகளே இங்கு பிரச்சனை இருப்பதை உறுதி செய்கிறார்கள். ஆனால் நீங்கள்……?
இப்பொழுதெல்லாம் வன்னியில் ஆவியாய் திரிவதே பயமாக இருக்கி;றது. 15 ஆயிரம் பரப்பளவில் ஆடு மாடு நாய் பூனை தவிர நானும் எனது தோழர்களும் எமது குடும்பங்களைத் தேடி அலைகின்றோம். அந்த ஆடு மாடு நாய்களுக்கு உள்ள உணர்வு கூட உங்களுக்கு இல்லாமல் போனது……..
-நேற்று முன் தினம் உறங்க முடியாமல் உறங்கியபோது கனவில் வந்த வன்னிச் சிறுமி-
வடக்கான் ஆதாம்.