Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரணதண்டனை இடைநிறுத்தம் மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த ஆரம்ப வெற்றி : இ. தம்பையா

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டiயை நிறைவேற்றாது இடைநிறுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராக மக்கள் முன்னெடுத்த வெகுஜனப் போராட்டங்களுக்குக் கிடைத்திருக்கும் தொடக்கநிலை வெற்றியாகும்.

உலகநாடுகளில் பெரும்பாலானவற்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பூரணமாக இரத்துச் செய்யப்பட்டோ இடைநிறுத்தப்பட்டோ இருக்கும் நிலையில் ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடெனப் பேசப் இந்தியாவில் இந்த மூவர் மீது மட்டுமன்றி, முற்றாகவே மரண தண்டனை நிறைவேற்றுவதைத் தடை செய்ய வேண்டும். இந்த மூவர் மீதான மரண தண்டனை நிறைவேற்றம் முழுமையாக இரத்துச் செய்யப்படுவதுடன், மரணதண்டனை நிறைவேற்றம் பூரணமாகவே சட்டப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக சர்வதேச அதன் அமைப்பாளர் இ.தம்பையா மூவர் மீதான மரணதண்டனை நிறைவேற்றம் பற்றி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்iயில் மரண தண்டனைகளுக்காக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனைகள் நிறைவேற்றப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேல் நீதிமன்றம் விதிக்கும் மரணதண்டனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு முறையே மேன்முறையீடு செய்து தண்டனையை நீக்கும் அல்லது குறைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் மேல்நீதிமன்றம் விதிக்கும் ஒவ்வொரு மரணதண்டனைத் தீர்ப்பினை அடுத்தும் ஜனாதிபதி அதனைப் பொதுவாகவே இடைநிறுத்தி வைக்கும் நடைமுறை பேணப்பட்டு வருவதுடன், பொதுவாகவே மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுவதில்லை. இலங்கையிலும் மீண்டும் மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளன. இந்தியாவில், இலங்கையில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் எல்லா வழக்குகளிலும் மரணதண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களைக் குற்றச் செயல்களுக்குள் தள்ளுவதும், மக்கள் மீது குற்றச் செயல்களைப் புரிவதும் சமூக அமைப்பின் அல்லது ஆட்சியின் விளைவுகளே. அதேவேளை குற்றச்செயல்களைக் கடுமையான தண்டனைகள் மூலம் நிறுத்திவிட முடியாது வரலாற்றுப் பட்டறிவாகும். தண்டனைகளின் மூலம் உடனடியாகவும், சிறிதளவும் குற்றச் செயல்களைக் குறைக்க முடியுமானாலும், பண்பாட்டு ரீதியான வளர்ச்சி மூலமே படிப்படியாகவே குற்றச்செயல்களை குறைக்க முடியும்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு, சமூகத்திற்கு எதிரான குற்றச்செயல்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படக் கூடாது என்பதே நாகரீகமடைந்த உலக சமூகத்தின் எதிர்பார்ப்பாகும். குற்றம் புரிந்து தண்டிக்கப்பட்டவர்களும் வேறொரு விதத்திலேனும் வாழ்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி ஜெயின் விசாரணை அறிக்கை பல்வேறுவிதமான விடயங்கள் பற்றிக் கேள்வியெழுப்பி விசாரிக்கும்படி கேட்டிருந்தபோதும் அவை பற்றி விசாரிக்கப்படவில்லை. பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றோர் மட்டுமே இவ்வழக்கில் மோசமாக தண்டனைக்குள்ளாகியுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை பற்றி இன்னும் பல உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வுண்மைகளை மறைக்கும் வகையிலும், பழிவாங்கும் மனோபாவத்துடனும் இந்த மூவர் மீதான மரணதண்டனைத் தீர்;ப்பை 21 வருடங்களுக்குப் பின்னர் திடீரென நிறைவேற்ற முயற்சிப்பது நியாயமானதல்ல.

தனிநபர் படுகொலைகளையும், அரசியல் படுகொலைகளையும் எமது கட்சி அங்கீகரிக்கவில்லை. அவை எதிர்ப்பு நடவடிக்கையோ, போராட்ட வழிமுறையோ அல்ல அவ்வாறான கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அக்கொலைகளைப் புரிந்தோர் சட்டப்படி அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அது நிறைவேற்றப்படக் கூடாது. என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

1970களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தோருக்கு அத்தண்டனை நீக்கப்பட வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட வெகுஜன இயக்கத்தில் அன்று எமது கட்சியின் தலைவர்கள் பங்கு கொண்டு தீவிரமாகச் செயல்பட்டனர்.
எனவே இன்று மூவர் மரணதண்டனை நிறைவேற்றத்திற்கு எதிராக எழுந்துள்ள வெகுஜன இயக்கத்தில் இந்திய மாக்சிச லெனினிசக் கட்சிகள் இயக்கங்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும் புலம்பெயர்ந்த நாடுகளின் முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் எமது கட்சி இணைந்து நிற்கிறது. மரண தண்டனையை அகற்றக் கோடுகிறது.

இ. தம்பையா

சர்வதேச அமைப்பாளர்

Exit mobile version