விமான நிலையத்தில் ஜர்தாரிக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப் பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர்அதிகாரிகள் அவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஜர்தாரி நேராக ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்திற்கு பயணமானார். அங்கு பிரதமர் மன்மோகன்சிங் ஜர்தாரியை வரவேற்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியுடன் நடந்த இருதரப்பு பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், நட்பு ரீதியாகவும் இருந்தது என்று தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த மன்மோகன் சிங், பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அதிபர் முன்வந்தது எனக்கு மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், பாகிஸ்தானுக்கு வருமாறு அவர் விடுத்த அழைப்பு தான் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி கூறும்போது, எங்களுக்குள் நடந்த இருதரப்பு பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது என்று கூறினார்.
மேலும், இந்தியாவுடன் மேலும் உறவு வளர்த்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்த ஜர்தாரி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை விரைவில் பாகிஸ்தான் மண்ணில் சந்திப்பேன் என்றும் கூறினார்.