Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்மோகன் சிங் அரியணை ஏறினால், அரங்கேற இருப்பது மீண்டும் 1996! அத்வானி அரியணை ஏறினால்! சந்தேகமென்ன, 1998!: புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்க!

மாநிலக் கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். காங்கிரஸின் ஆதரவைப் பெறத் தயாராக இருக்குமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரஸின் கூட்டணியில் சேராத கட்சிகள் முதல் பிரிவைச் சேர்ந்தவை. இடதுசாரிகள், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, அகாலிதளம், அசாம் கண பரிஷத், இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை இந்தப் பிரிவைச் சேர்ந்தவை.

பாரதிய ஜனதாவுடன் சேர விரும்பாத கட்சிகள் அடுத்த பிரிவினர். தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜவாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகள், மக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவை இந்தப் பிரிவினைச் சேர்ந்தவை.

பாஜக அல்லது காங்கிரஸ் என்று எந்தக் கூட்டணியிலும் சேர்ந்து கொள்ளத் தயங்காத கட்சிகள் மூன்றாவது பிரிவினைச் சேர்ந்தவை. முதல் இரண்டு பிரிவில் இருக்கும் கட்சிகள்தான் காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையப் போகும் கூட்டணிக்கு அடிப்படை பலமாக இருப்பவை என்றால், இந்த மூன்றாவது பிரிவில் இருக்கும் கட்சிகளின் ஆதரவில்தான் பாஜகவோ, காங்கிரúஸô தங்களது கூட்டணியின் பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த மூன்றாவது பிரிவில் இருக்கும் கட்சிகள் தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் தளம், லோக் ஜனசக்தி கட்சி, பிரஜா ராஜ்யம், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, அதிமுக, பாமக, மதிமுக போன்றவை. இவை அல்லாமல், வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் சில கட்சிகளும் இதில் அடக்கம்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் இன்னொரு பிரச்னையும் எழக் கூடும். மன்மோகன் சிங்கைத் தனது பிரதமர் வேட்பாளராகக் காங்கிரஸ் கட்சியும், அத்வானியைப் பாரதிய ஜனதாக் கட்சியும் அறிவித்து அதனடிப்படையில் மக்களை சந்தித்து வாக்குகளும் பெற்றுவிட்டன. இந்த இரண்டு கட்சிகளுமே, அல்லது அவர்களது தலைமையிலான கூட்டணியுமே, வெளியில் இருந்து ஆதரவு பெறாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவு.

இடதுசாரிகளின் ஆதரவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்கிற நிலைமையில், காங்கிரஸ் கட்சி இன்னாரைப் பிரதமராக்கினால் தாங்கள் ஆதரவளிக்க முன்வருகிறோம் என்றோ, மன்மோகன் சிங் பிரதமர் என்றால் ஆதரவளிக்க மாட்டோம் என்றோ இடதுசாரிகள் நிபந்தனை விதிக்கக் கூடும். அதைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவும் செய்யும்.

அப்படியொரு நிர்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனென்றால், பாஜகவை ஆதரிப்பது என்று முடிவெடுக்கும் கட்சிகள் அத்வானியைப் பிரதமர் என்று ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருப்பவர்கள்தான்.

குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று ஆட்சி அமைத்து எண்ணிக்கை பலம் காங்கிரஸýக்குக் கிடைக்காமல் போனால், அரியணை ஏறும் வாய்ப்பு அத்வானிக்குத்தான் அதிகமாகக் காணப்படுகிறது. மூன்றாவது அணியைத் தாங்கிப் பிடித்து ஆட்சி அமைக்க விடுவதைவிட, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதைத்தான் காங்கிரஸ் தலைமை விரும்பும்.

மதச்சார்பின்மை என்கிற ஒரே ஒரு விஷயம் தவிர, ஏனைய கொள்கைகளில் ஒத்த கருத்துடையவைதான் பாஜகவும் காங்கிரஸýம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இல்லை. மேலும், இரு கட்சி ஆட்சி முறை வேண்டும் என்று விரும்புபவை இரண்டு தேசியக் கட்சிகளும். அப்படிப்பட்ட நிலைமையில், மூன்றாவது அணியை ஆதரிக்காமல் எதிர்க்கட்சியாக அமரத்தான் காங்கிரஸ் விரும்பும்.

அந்நிய முதலீட்டாளர்கள், அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த மேலை நாடுகள், உலக வங்கி போன்றவையும் பொருளாதாரக் கொள்கை மற்றும் வெளிவிவகாரக் கொள்கையில் அதிகம் வேறுபாடில்லாத காங்கிரஸ் அல்லது பாஜகவின் தலைமையில் ஆட்சி அமைவதைத் தான் விரும்பும். அமெரிக்கத் தூதர் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியை சந்தித்துப் பேசியதன் பின்னணியில் இதுகூடக் காரணமாக இருக்கக் கூடும்.

அரியாசனப் போட்டியின் கடைசிக் கட்டத்தில், பிரதமராகப் போவது அத்வானியா அல்லது காங்கிரஸ் சார்பில் ஒருவரா என்பதில்தான் முடிகிறது. ஒரு வேளை, மன்மோகன் சிங் அல்லாமல் வேறொருவர் பிரதமரானால் இடதுசாரிகள் காங்கிரஸýக்கு ஆதரவளிக்கக் கூடும்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதுபோலத் தோன்றும் நபர்கள் அனைவருமே திடீரென பின்தங்கி எதிர்பாராத ஒருவர் அரியணை ஏறுவாரா? அதற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று தோன்றுகிறது. ஆனால், நிச்சயமாக அவர் மூன்றாவது அணியினராக இருக்க முடியாது என்பதும் தெளிவு!

புது தில்லி அரசியல் வட்டாரங்களில், பிரதமர் பதவி என்பது கூட்டணிக் கலாசாரம் வந்த பிறகு கறவைப் பசு போன்றது என்று வர்ணிப்பார்கள். ஆளுக்கு ஆள் பால் கறக்க சம்மதிக்கும் பசுவைப் போலப் பிரதமர் சாதுவாக இருந்தால்தான் பிரதமர் நாற்காலியில் தாக்குப் பிடிக்க முடியும் என்று அர்த்தம்.

அரசியலில் பலி கடா ஆக்கப்படுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கறவைப் பசு பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இந்தக் கதையைச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

அடுத்த சில மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, 15வது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் தெரிந்துவிடும். வாக்குப் பெட்டி பல விசித்திரங்களை நிகழ்த்தி இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பலரது கனவுகளையும் தகர்த்திருக்கிறது. வாக்குச் சீட்டின் மகத்துவம் அத்தகையது? அரியணை ஏறும் வாய்ப்பு மன்மோகன் சிங்குக்குத்தான் அதிகம் காணப்பட்டாலும், இந்த முறை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. மன்மோகன் சிங் அரியணை ஏறினால், அரங்கேற இருப்பது மீண்டும் 1996! அத்வானி அரியணை ஏறினால்! சந்தேகமென்ன, 1998!

புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்க!
Thanks:Dinamani.

Exit mobile version