Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்னார் மாவட்டத்தில் புதிதாக முளைவிடும் சிங்களக் குடியேற்றங்கள்.

மன்னார் மாவட்டத்தின் தென்எல்லையோரப்பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாகவுள்ள சில பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

முள்ளிக்குளம், கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிக்குளம் பிரதேசம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் அப்பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதி கடற்படை தளமாக மாற்றப்பட்டுள்ளது.

கொண்டச்சி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் முந்திரிகைச்செய்கைக்கு பெயர் பெற்றது.
யுத்தகால நடவடிக்கையின் காரணமாக முந்திரிகைச்செய்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் முற்றாக அழிக்கப்பட்டது

தற்போது அப்பகுதியில் புனரமைப்பு என்ற போர்வையில் சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகளே அரச தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மடு வீதி மற்றும் மடு பிரதேசத்தில் பௌத்த விகாரைகள் விஸ்தரிப்பு, சிங்கள குடியிருப்புக்கள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் தமிழர் தாயகப்பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ் குடா நாட்டில் ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்தின் துணையுடன் சிங்கள குடியேற்றம் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகிறது.

ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோர் இதனை தட்டிக்கேட்பதில்லை.

அம்பாரை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்கு சொந்தமான பெருமளவான நிலப்பரப்புக்கள் சிங்களவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.

இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

இதனை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் மக்கள் போராட்டங்களை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம் என செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் அரச பயங்கரவாதம் குறித்த போராட்டங்கள் எதனையும் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கத தயாரற்ற நிலையிலுள்ளமையால் அவை துரித வேகத்தில் நடைபெறுகின்றன.

Exit mobile version