Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்னாரில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் விதவைப் பெண்கள் .

மன்னாரில் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மிகவும் அபாயகரமான தொழிலில் குடும்ப நிலைமை காரணமாக கணவனை இழந்த விதவைப் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொழிலின்மை மற்றும் குடும்பத்தினைப் பராமரிப்பதற்காக வருமானமின்மை காரணமாக இப்பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மாதம் ஒன்றிற்கு 200 டொலர்களை மாதாந்த வருமானமாகப் பெறுகிறார்கள்.

கண்ணி வெடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவர் ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், தமது கணவரும் தாயும் 2007 ஆம் ஆண்டு யுத்தத்தில் கொல்லப்பட்டதாகவும் தமது கிராமத்தில் சிறந்த வருமானம் மிக்க தொழிலாக இத்தொழில் உள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

மற்றொரு பணியாளர் தெரிவிக்கையில் நான் பயப்படவில்லை எனக் கூறினால் நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தமாகும். இப்போதும் பயமாக இருக்கிறது. சகல கண்ணிவெடிகளையும் அகற்றுவதென்பது சாத்தியமான விடயமல்ல. நான் அகற்றும் ஒவ்வொரு கண்ணிவெடியும் 10ப் பேரையாவது அலல்து ஒருவரையாவது காப்பாற்றும் என்றும் தனது நிதி நெருக்கடி காரணமாகவே ஆபத்தான இத்தொழிலுக்கு தயாரானதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு கிழக்குப் பகுதிகளில் 90 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாக அரசாங்கத்தின் சமூக சேவைகள் அமைச்சு மதிப்பிட்டுள்ளது. 50 வீதமான குடும்பங்களுக்குப் பெண்களே தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர். அநேகமானோர் 30 வயதிற்குட்டபட்டவர்கள், அவர்கள் தமது குடும்பத்தையும் பெற்றோர்களையும், சகோதரர்களையும் பாரமரிக்கின்றனர் என போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சங்கத்தின் பணிப்பாளர் விசாகா தர்மதாஸ கூறியுள்ளார்.

இதே வேளை இளவயதில் கர்ப்பமடையும் பெண்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக யாழ்.மாவட்ட தாய்சேய் நலப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி. திருமகள் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். 2008இல் 442 பேரும், 2009 இல் 374 பேரும் 2010 இல் கடந்த ஆறு மாதத்தில் 234 பேரும் இளம் வயதில் தாயாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்குக் கிழக்குப் பெண்கள் அமைப்பு, இராணுவ மயமாக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் கெடுபிடிகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தள்ளது.

Exit mobile version