Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்:சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை.

இலங்கையில் மனித உரிமை பணியாளர்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுவதாக வெளியாகியிருக்கும் அறிக்கைகள் தொடர்பாகப் பீதியடைந்திருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் குழு கூறியுள்ளது.மனித உரிமை பணியாளர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்படும் சாத்தியப்பாடு குறித்தும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் 35 மனித உரிமைகள் பணியாளர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.உரிமைகள் பணியாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லையென்று அரசு கூறி வருகிறது.பட்டியலில் இலங்கையின் முன்னணி மனித உரிமைகள் விவகாரத்துக்கான சட்டத்தரணி ஜே.சி. வெலியமுன்ன, உரிமைகள் பணியாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் பட்டியலில் முன்னணி இடத்திலிருப்பது

புரிந்துகொள்ளப்பட்டதொன்று என்றும் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படவிருப்பவர்கள் எனவும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசை விமர்சித்த 35 பணியாளர்கள்,சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படும் பட்டியல் தொடர்பாக அரசு உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

உடல் ரீதியான தாக்குதல்கள்,மரண அச்சுறுத்தல்கள் உட்பட பாரதூரமான தொந்தரவுகளுக்கு முன்னர் இலக்காகியிருந்த வெலியமுன்ன மற்றும் சரவணமுத்து ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சமூகத்துக்கு ஆபத்தான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு சர்வதேச மன்னிப்புச்சபை,மனித உரிமை கண்காணிப்பகம்,ட்ரான்ஸ் பேரன்சி இன்ரர்நெஷனல் ஸ்ரீலங்கா,மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் என்பன அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளன.

இலங்கையில் மனித உரிமைகள் பணியாளர்களுக்கெதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் கவலை தெரிவித்திருந்தது.சர்வதேச அமைப்புகள் இது தொடர்பாக கவலையை வெளிப்படுத்துமாறு சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தை அணுகியதாக அந்த அமைப்பைச் சேர்ந்த அலெக்ஸ் வில்க்ஸ் பி.பி.சி. சிங்கள சேவைக்குக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனநாயகக் கோட்பாடுகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமென சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரான ஜயான் மென்டிஸ் கூறியுள்ளார்.

Exit mobile version