Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனித உரிமை ஆர்வலர்களை அழித்தொழித்துக் கொண்டிருக்கும் ஆயுத கலாசாரம்:அஜாதசத்ரு

12.10.2008.

கடந்த இரு தசாப்த காலத்திற்கும் மேலாக தென்னிலங்கை அரசியல் தலைமைகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு யுத்தமானது தற்போது மிகவும் மோசமாகத் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டிலுள்ள அறிவு ஜீவிகள், ஆளுமைமிக்கவர்கள் என்று பல்வேறு தரப்பினரையும் அழித்தொழிக்கும் நிலைக்கு வழிவகுத்துள்ளதையே தொடரும் ஒவ்வொரு சம்பவங்களும் தெளிவாகச் சுட்டிக்காட்டி நிற்கிறது.

சிங்கள பௌத்த கடும்போக்கு சிந்தனைகளை மாத்திரம் முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு யுத்த நடவடிக்கையானது நாட்டின் ஒரு பகுதி மக்களை பட்டினிச்சாவுக்கு உட்படுத்தியும் பல்குழல் ரொக்கட் தாக்குதல், விமானக் குண்டுவீச்சு என்பவற்றால் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆட்சியாளர்களின் கடும்போக்கான செயற்பாடுகளை விமர்சிக்கும் புத்திஜீவிகள், மனித உரிமையாளர்கள் அச்சுறுத்தப்படும் அல்லது பழிவாங்கப்படும் போக்குகள் அதிகரித்து வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்த அமைப்புகளால் உண்மை நிலையை சுட்டிக்காட்டிய புத்திஜீவிகள் அழிக்கப்பட்ட போக்குகளும் 1989-1990 கால கட்டத்தில் தென்னிலங்கையில் ஜே.வி.பி.யின் அரசியல் செயற்பாட்டை ஏற்க மறுத்தவர்கள் ரயர் போட்டு எரிக்கப்பட்ட கடும் போக்கும் இன்று நாடு பூராகவும் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலைமையையே காணக்கூடியதாகவுள்ளது.

ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், அறிவுசார்துறை சேர்ந்தவர்கள், அரசசார்பற்ற தொண்டர் நிறுவன பிரதிநிதிகள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கடந்த காலங்களில் இந்த நாடு பெருமளவில் இழந்துள்ளது. அதுமட்டுமன்றி இவ்வாறான துறைசார்ந்த பெருமளவானோர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதையும் வெளியேறிக் கொண்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

மனித உரிமை ஆர்வலரும் பிரபல சட்டத்தரணியும் டிரான்ஸ்பரன்ஷி இன்ரர்நெஷனல் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளருமான ஜே.வி.வெலியமுனவின் வீட்டுக்கு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளார். இலஞ்சம், ஊழல் என்பவற்றுக்கு எதிராக போராடி வரும் ஜே.வி.வெலியமுன சமூக விரோத சக்திகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி இலஞ்சம், ஊழல் மோசடி தொடர்பான பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றில் ஆஜராகி சமூகவிரோத சக்திகளை அம்பலப்படுத்துவதில் பெரும் பங்களிப்புச் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையில் இலஞ்சம், ஊழல் மோசடிகளில் ஈடுபடும் சமூகவிரோத சக்திகளை டிரான்ஸ்பரன்ஷி இன்ரர்நெஷனல் அமைப்பின் ஊடாக சர்வதேச ரீதியாக அம்பலப்படுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

அவரின் இவ்வாறான நடவடிக்கைகள் மேலும் தொடரக்கூடாது என்ற நோக்கத்துடனேயே அவரின் வீட்டை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பல்வேறு பொது அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இச்சம்பவத்தைக் கண்டித்து தலைநகர் கொழும்பில் சட்டத்தரணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் அது தொடர்பான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இதுவரையும் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறே தென்னிலங்கையில் இளம் பெண் மருத்துவரான இந்துனில் பண்டாகிரிய மருத்துவமனையில் வைத்து படைவீரர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய படைவீரரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்ததையடுத்தே தலைமறைவாகியிருந்த படைவீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறே மட்டக்களப்பு தேத்தாத்தீவில் ஒரு குழந்தையின் தாயாரான இளம் பொறியியலாளர் ஒருவர் கடமைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த போது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் வவுனியாவில் இரு இளம் பெண்கள் அண்மையில் இனந் தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இரு பெண்களில் ஒருவர் அரச வங்கி ஊழியராவார். மற்றொருவர் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிபவராவார். இதனை விட மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளரான ராதிகா தேவகுமார் கல்லடியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந் தெரியாத ஆயுத பாணிகளால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் அங்கிருந்த ஒரேயொரு தமிழ்ப் பெண் ஊடகவியலாளரான ராதிகா தேவகுமார் ஆயுதபாணிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதனைவிட, கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புத்திஜீவிகளையும் அறிவியலாளர்களையும் ஊடகவியலாளர்களையும் ஆயுதக் கலாசாரம் பலியெடுத்துள்ளது. அதியுயர் பாதுகாப்பு பிரதேசமான கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திற்குள் வைத்து கடத்திக் கொல்லப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத்திற்கு என்ன நடந்ததென்று இதுவரையும் எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.

இவ்வாறே திருகோணமலை நகரில் வைத்து ஐந்து உயர் கல்வி கற்கும் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மூதூர் நகரில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களையடுத்து அங்கு பணியாற்றிய அக்ஷன் பாம் தொண்டர் நிறுவன ஊழியர்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து வடக்கு, கிழக்கில் மனிதப் பேரவலத்தில் சிக்குண்டு தவிக்கும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்த தொண்டர் நிறுவனங்களின் சுயாதீனமான செயற்பாடுகள் முடக்கப்பட்டது.

இறுதியில் வன்னிப் பெருநிலப்பரப்பில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் அவலநிலைமையை எதிர்கொண்டு தவிக்கும் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவந்த அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அரசின் எச்சரிக்கையைடுத்து அங்கிருந்து முற்றாக வெளியேறியுள்ளன.

புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரையும் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் ஆயுத கலாசாரத்தின் உச்சப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?

 

Exit mobile version