இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மனித உரிமை மீறல் என்னவென்றே சரிவரப் புரிவதில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இலங்கை தனியானதோர் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதாக முன்னை நாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஆதங்கப்படுகின்றார்.
மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு வைக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சியில் இருக்கும் போது மனிதவுரிமைகளின் காவலனாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் அதிகாரத்துக்கு வந்தவுடன் மனிதவுரிமை மீறல்களின் முக்கிய சூத்திரதாரிகளாக மாறிவிடுவது இலங்கையின் துர்ப்பாக்கியம்.
மனிதவுரிமை தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் சரத்துக்கள் தொடர்பில் நம் நாட்டில் எத்தனை அரசியல் வாதிகள் சரிவர அறிந்து வைத்திருக்கின்றார்களோ தெரியாது. அதுபற்றிய அக்கறை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ அடியோடு இல்லை என்றும் கூறியுள்ளார்.
மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்துக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், ஊடக சுதந்திரத்தை மறுக்கும் மறுக்கும் நாடுகளின் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அண்மையில் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
அவரும் கூட எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஜனாதிபதியின் மனித உரிமைகள் மீதான அக்கறையை நினைவுபடுத்தினார். அன்றைய ஐ.தே.க. அரசாங்கத்தில் காணாமல் போன பிள்ளைகளின் தாய்மாரை ஒன்றிணைத்து அன்னையர் முன்னணியை உருவாக்குவதில் தானும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையினதும் நாட்டின் தலைவரினதும் தோற்றங்கள் என்றுமில்லாதளவுக்கு சர்வதேச சமூகத்தின் முன் சீர்கெட்டுப் போயுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது உலகம் மகிந்த ராஜபக்ஷ குறித்து என்ன பேசுகிறது என்ன செய்கிறது என்பதை வெளிப்படுதுகிறது. ‘அரசியல் கொள்கை முரண்பாடுகள் காரணமாக அரசாங்கத்தில் இருந்து விலகிய தனக்கு 25 ஆண்டுகளாக நான் பழகிய நண்பரை சர்வதேச ரீதியில் போர் குற்றவாளி என முத்திரை குத்தும் போது, எனக்கும் துக்கம் ஏற்படுகிறது. 1989 ஆம் ஆண்டு நான்இ மகிந்தவுடன் இணைந்து, தாய்மார் முன்னணியை ஆரம்பித்து காணாமல் போனவர்களின் விபரங்களை திரட்டியதுடன் மகிந்த ராஜபக்ஷ அந்த தகவல்களுடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச அமைப்புகளை சந்திக்க சென்றார்.
எனினும் மகிந்த ராஜபக்ஷ தனது கொள்கைகளை பின்னுக்கு தள்ளி விட்டு, இலங்கையை மனித உரிமைகள் மீறப்படும் நாடுகள் வரிசையில் முன்னணிக்கு இட்டுச் சென்றுள்ளார். அத்துடன் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் 5 நாடுகளில் வரிசையில் இலங்கையையும் இடம்பெற செய்துள்ளார்’ எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் தான் இப்படியென்றால் வெளிநாடுகளில் அதற்கும் மேலான பலமான குற்றச்சாட்டுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையை நோக்கி எழுப்பப்படுகின்றன. அதற்கான அண்மைக்கால உதாரணமாக
லண்டன் நகரின் முன்னாள் மேயரும், தொழிற்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான கென் நிரிக்ஷன் பகிரங்க கூட்டமொன்றில், ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மகிந்த ராஜபக்ஷ போர் குற்றவாளி என தெரிவித்திருந்ததைக் குறிப்பிடலாம்.
அதற்கு மேலாக பல சர்வசேத அமைப்புகளும் புத்திஜீவிகளும் கூட இதே கருத்தை பிரதிபலிப்பவர்களாகவே உள்ளனர்.