Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் எமது முறையீடு : TNPF

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கொண்டுவரப்படவிருக்கும் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பில் எமது முறையீடு

கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையானது இலங்கையில் நல்லிணக்கத்தினையும் பொறுப்புக்கூறலினையும் மேம்படுத்தல் என்ற தலைப்பில்  தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. மேற்படி தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தினை நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், நீதியையும், ஒப்புரவையும், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த சுயாதீனமானதும் நம்பதகுந்ததுமானதும் தனது சட்டக் கடமைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தது.

மேற்போந்த தீர்மானத்தில் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி ஓர் அறிக்கையினை 23-03-2012 அன்று வெளியிட்டிருந்தோம். அவ்வறிக்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் ஓர் சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை சர்வதேச சமூகம் கோருவதனைத் தவிர்ப்பதற்கான ஓர் தந்திரோபாயமாகவே இலங்கை அரசாங்கமானது நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது என்றும், அடிப்படையிலேயே தவறான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக் கூறலிற்கான உள்ளகப் பொறிமுறை ஒன்றினை உருவாக்கக் கோருவதும் இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கு முரணானது என்றும், குற்றம் சாட்டப்பட்டவரையே தனது வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கோருவதற்கு இணையானது என்றும் சுட்டிக் காட்டியிருந்தோம். மேலும் இத்தகைய தீர்மானத்தினால் தமிழ் மக்களின் வாழ்வில் எவ்வித நல்ல மாற்றமும் ஏற்படாது என்பதுடன் இத்தீர்மானமானது துரிதகதியில் தமிழ்த் தேசத்தினை அழிக்க இலங்கை அரசாங்கத்திற்கு ஓர் வாய்ப்பான கால அவகாசத்தை வழங்கும் என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது எம்மால் வெளிப்படுத்தப்பட்ட அச்சமும் அக்கறையும் துரதிஸ்டவசமாக தற்போது உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தினால் நிறைவேற்றப்பட்டும் கூட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள தமிழ் மக்களின் தாயக பூமியானது கீழே விபரிக்கப்படும் முக்கியமான விடயங்கள் உட்பட பலவற்றிற்கு ஆட்பட்டிருக்கின்றது.

1. தமிழ் மக்களை அவர்களின் சொந்த தாயக பூமியில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக்கும் நோக்கில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்

2. தமிழ் மக்களின் தனிப்பட்ட சொந்தக் காணிகள் அரசால் பறிமுதல் செய்யப்படுதல்.

3. இராணுவ ஆக்கிரமிப்பு

4. காலாசார அடையாளங்களை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் கட்டாய சிங்கள பௌத்த மயமாக்கல்.

5. தமிழ் மக்களின் சுதேசிய பொருளாதாரத்தை திட்டமிட்டு அழித்தல்.

6. சட்டவாட்சியின்மை மற்றும் தண்டனை விலக்கு (உதாரணமாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள், மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள், காணாமல்போதல்கள், சட்டத்திற்குப் புறம்பான கைதுகள், தடுப்புக்காவலில் உள்ளோர் மீதான சித்திரவதை, தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட முன்னாள் போராளிகள் மீதான கடுமையான தொந்தரவுகள் போன்றன)

2013-02-13 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது மேற்கூறப்பட்ட விடயங்களைப் பெருமளவில் உறுதிப்படுத்துகின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்களை நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இன்மையினாலே நடைபெறுகின்றது எனப்பார்க்கப்படக்கூடாது மாறாக தமிழ் மக்களின் அடையாளங்களை அழித்து அவர்கள் ஓர் தனித்துவமான

தேசமாக இருப்பதனை இல்லாமல் செய்யும் நோக்கிலான திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் என்றே நோக்கப்படல் வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

வரலாற்று ரீதியாகத் தோற்றுப்போன உள்ளுர் பொறிமுறைபற்றி அழுத்துதல் தேவையற்றது. அண்மையில் பிரதம நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது உள்ளக நீதி பரிபாலன பொறிமுறையானது நீதியானதாக இருக்கப்போவதில்லை என்பதை எல்லோர் மனதிலும் உணர்த்தியிருக்கும்.

இத்தகைய பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது

1. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் பொறுப்புக்கூறல் தொடர்பான அறிக்கை.

2. அண்மையில் வெளிக்கசிந்த ஐக்கிய நாடுகளின் பெற்றி என்பவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை.

3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்வு தொடர்பான அறிக்கை, குறிப்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைக்கான அழைப்பு விடுத்துள்ளமை.

இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களது கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.

இறுதி யுத்தத்தின்போது நடந்தவை தொடர்பில் கூறப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தம்முடைய பாதுகாப்பதற்கான கடமை என்ற கோட்பாட்டின் கீழான தனது கடமையான தமிழ் தேசம் சார்பாகத் தலையிடுவதனைத் தவிர்த்ததன் மூலம் செய்யத்தவறி விட்டதை சுட்டிக்காட்டுகின்றன.

தமது அரசியல் நலன்களுக்காக பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல் என்ற பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவை ஐ.நாவும், சர்வதேச சமூகமும் பார்க்க விரும்பியதால் தமிழ்த் தேசம் மீதான இன(ப்படுகொலை)வழிப்புப் போர் அரங்கேறியது. எது எவ்;வாறாயினும் யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் கழிந்துவிட்டபோதிலும் தமிழ்த் தேசமானது ஓர் கட்டமைப்புசார் இனவழிக்கை எதிர்கொண்டு வருகின்றது.

இவற்றிற்கிணங்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது இனப்படுகொலை உட்பட சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டதுமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றினை நடாத்த வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகின்றது அத்துடன் பாதுகாப்பதற்காக கடமை என்னும் கோட்பாட்டையும், தமிழ் மக்களின் தாயக பூமியான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஓர் இடைக்கால நிர்வாகம் ஒன்றினை உருவாக்குதல் என்பதையும் உள்வாங்கி ஓர் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கோருகின்றோம்.

இத்தகைய இடைக்கால நிர்வாகமானது கட்டாயமாக தற்போதய இலங்கையின் அரசியல் அமைப்பு கட்டமைப்புக்கு வெளியில் ஏற்படுத்தப்படல் வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தின் அழிப்பைத்தடுக்க உதவும் என்பதுடன் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உதவும். மேலும் இத்தகைய இடைக்கால நிர்வாக சபையானது பொறுப்புக்கூறல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்கு மட்டுமல்லாது இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு உதவும் எனநாம் கருதுகின்றோம்.

ஐP.ஐP.பொன்னம்பலம் -தலைவர்

செல்வராஜா கNஐந்திரன்-பொதுச் செயலாளர்

Exit mobile version