அத முழுமை வருமாறு :
‘‘இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை, உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும், அணு ஆயுத வல்லரசு நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தியும், ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த கொடிய குற்றவாளியான இலங்கையின் அதிபர் ராஜபக்சே, அனைத்து உலக நாடுகளின் நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியவர்.
போரில் ஆயுதம் ஏந்தாத தமிழ் மக்களை, வயது முதிர்ந்தவர்கள், தாய்மார்கள், சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர் சிறுமியரை, குண்டுகள் வீசிக் கொன்றும், பீரங்கித் தாக்குதல் நடத்தியும், உணவுக்கே வழி இன்றிப் பட்டினி போட்டும், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சைக்கு, வழி இன்றிச் செய்தும் சாகடித்தவர் ராஜபக்சே. அவர் போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று, அயர்லாந்து நாட்டிலே கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பு ஆயம் அறிவித்தது.
மனிதகுலத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்சே நடத்திய அக்கிரமங்கள் குறித்து விசாரணை மன்றம் அமைக்க, ஐ.நா சபை அறிவித்தது. தமிழ் ஈழ மண்ணில், தமிழ் இனத்தையே கரு அறுக்கும் ரத்த வேட்டை ஆடிய ராஜபக்சே, ‘ஈழத்தமிழர்களுக்குத் தாயகம் கிடையாது; தமிழ் இனம் தனித் தேசிய இனம் அல்ல என்றும்; தமிழர்களின் பூர்வீகத் தாயகமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறியுள்ளார்.
இலங்கையில், லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளை, இடித்து நொறுக்கித் தரைமட்டம் ஆக்கிவிட்டு, தமிழர் தாயகத்தில் சிங்களர்களைக் குடியேற்றும் வேலையைத் தீவிரப்படுத்திவிட்டு, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழித்துவிட்டு, சிங்கள பௌத்த விஹாரைகளைக் கட்டும் வேலையைச் செய்துகொண்டே, தாயக விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் கல்லறைகளை எல்லாம் இடித்துத் தகர்த்து, அவ்வீரர்களின் எலும்புகளைக் குப்பையில் வீசிவிட்டு, கோர வெறியாட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்ற இலங்கை அதிபர், தமிழ்க்குலத்தின் ஜென்மப் பகைவன் மட்டும் அல்ல; மனிதநேயம் உள்ள மனிதகுலத்தின் ஒட்டுமொத்த எதிரி.
எண்ணற்ற தமிழ்ப்பெண்கள், பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், தமிழ் இளைஞர்களை அம்மணமாக்கி, கைகள், கண்களைக் கட்டி, சிங்களச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும், நினைக்கும்போதே நம் நெஞ்சில் கண்ணீரையும், ரத்தத்தையும் கொட்டச் செய்கிறது. வேதனையால் வெந்து போன தமிழர் இதயத்தில், சூட்டுக்கோலை நுழைக்கும் வகையில், ராஜபக்சேவுக்கு, இந்திய அரசு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
ஜூன் 8 ஆம் தேதி, இந்தியப் பிரதமரைச் சந்தித்துப் பேச, ராஜபக்சே, டெல்லி வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், வரவேற்பு அளிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், ஜூன் 8 ஆம் தேதி, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்துக்கு எதிரே காலை 10 மணி அளவில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதே நாளில், மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அறிவித்து இருக்கிறோம்’’