பாகிஸ்தானில் மத அடிப்படை வாதிகளுக்கு எதிராக புனிதப் போர் தொடங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெநசீர் புட்டோ தம்பதியினரின் மகனுமான பிலாவல் புட்டோ தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநர் சல்மான் தசீருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்றது.
இதில் அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ கலந்து கொண்டு பேசுகையில், பஞ்சாப் மாகாண ஆளுநரின் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது, மேலும் இதை மதத் தீவிரவாதிகள் கொண்டாடுகின்றனர். இந்த படுகொலையைச் செய்த நபரை மதத் தீவிரவாத அமைப்புகள் ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் தியாகி என்றும் போற்றுகின்றனர்.
இவர்கள்தான் உண்மையான மதத் தீவிரவாதிகள். இவர்களைப் போன்றவர்காளால்தான் இஸ்லாமிய மதத்தை உலகம் தவறாக பார்க்கிறது. எனவே இதுபோன்ற மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர் தொடங்கப்பட வேண்டும்.