Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மத்திய அரசை மேல் முறையீடு செய்யக் கோரி தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மீனவரின் மனைவி மனு

Emerson-Prashanth-Vincent-Augustus-and-Bodethஇலங்கை அரசின் அரசியல் அதிகாரவர்க்கம் போதைப் பொருள் வர்த்தகத்தோடு தனக்குள்ள தொடர்பை மூடி மறைப்பதற்காக தமிழக மீனவர்கள் ஐந்துபேரிற்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒருவரான எமர்சனின் மனைவி லாவண்யா இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களைக் காப்பாற்ற மேல்முறையீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இலங்கை இனக்கொலை அரசுடன் இனக்கொலையின் பங்காளியான இந்திய அரசும் தூக்குத்தண்டனை குறித்துப் பாராமுகமாக உள்ள நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவின் விபரம்:

எனது கணவர் எமர்சனும், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகியோரும் மீன்வளத் துறை துணை இயக்குநரின் அனுமதி பெற்று 28.11.2011-இல் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றனர். அவர்களை 100 கிராம் ஹெராயின் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேற்கூறிய மீனவர்கள் அனைவரும் எந்தவித குற்றமும் செய்யவில்லை. இதற்காக 1.12.2011 முதல் மீனவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு எங்களின் குடும்பத்துக்கு தினமும் ரூ.250 அளித்து வருகிறது. இதை வைத்து குடும்பம் நடத்தவே சிரமப்படுகிறோம். போதைப் பொருள் கடத்தலுக்கு இலங்கை சட்டப்படி அதிகபட்சம் ஆயுள் தண்டனை தான் வழங்க முடியும். ஆனால், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை எனது கணவர் உள்பட 5 பேரையும் மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எங்களுக்கு போதிய வசதி இல்லாததால் எங்களால் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோன்று வெளிநாட்டில் தண்டனை பெற்றவர்களுக்காக மத்திய அரசே வழக்குரைஞரை நியமித்து வழக்கு நடத்த முடியும். மத்திய அரசால் மட்டுமே தண்டனை பெற்றுள்ள இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, மத்திய அரசு வெளிக்கடை சிறையில் உள்ள எனது கணவரை மீட்பது தொடர்பாக மேல்முறையீடு செய்ய மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கும், இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இலங்கை இந்திய அதிகாரவர்க்கங்களின் கூட்டு இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் இந்திய மீனவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது.

Exit mobile version