தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மாலினி பெரேரா என்று அடையாளம் காணப்பட்ட பெண்ணை கடந்தவார இறுதியில் கைதுசெய்திருப்பதாகபொலிஸார் தெரிவித்ததாகவும் ஆயினும், அது தொடர்பாக விபரித்திருக்கவில்லை என்றும் ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்தது.
இஸ்லாமியப் போராளிகளுடன் தொடர்புகள் இருக்கும் சாத்தியப்பாடு குறித்து பொலிஸார் விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி கூறியுள்ளார்.அவர் மீது இன்னமும் முறைப்படி குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்யவில்லை. ஏனெனில் பொலிஸார் தற்போதும் விசாரணை நடத்திவருகின்றனர் என்று ஜயக்கொடி கூறியுள்ளார்.உணர்வுபூர்வமற்ற வகையில் மத ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்தவரும் பாஹ்ரெய்னில் வசிப்பவருமான இந்த நூலாசிரியர் இலங்கைக்கு விடுமுறையில் வந்திருந்த சமயம் கைதுசெய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தனது நூல்களின் பிரதிகளை அனுப்ப முயற்சித்தபோது அவர் கைதானார். “இருளிலிருந்து வெளிச்சத்துக்கு”, “கேள்விகளும் பதில்களும்” என்பனவே அந்த நூல்களாகும்.
மத சகிப்புணர்வின்மைக்கு எழுத்தாளர் பலியாகியிருப்பதாக மாலினி பெரேராவின் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் கூறியுள்ளார். மத ரீதியான தீவிரவாதிகளுடன் மாலினி பெரேராவுக்கு ஏதாவது தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவது உட்பட சகல குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்திருக்கிறார்.