அனார் கவிதைகள்
மழை ஈரம் காயாத தார் வீதி
நிரம்பிய மாலை
இருள் அடர்ந்து இறுகி, பிசாசுகளின் தோற்றங்களுடன்
மல்லாந்து கிடக்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன்
இருளின் இருளுக்குள்ளே
எவ்வளவு பிரகாசம் நீ
கூதல் காற்றுக் கற்றைகளில்
நாசியில் நன்னாரி வேர் மணக்க மணக்க
மிதந்து வருகின்றாய்
தூர அகன்ற வயல்களின் நடுவே
“றபான்” இசைக்கின்ற முதியவரின் கானலோவியம்
இரவை உடைக்கின்றது
மிருகங்களுக்கு பயமூட்டுவதற்காக
நிறுத்தி வைக்கப்பட்ட வைக்கோற்பொம்மைகள்
அளவற்ற பயத்தில் தாமே நடுங்கிக் கொண்டு நிற்கின்றன
அடி பெருத்த விருட்சங்கள்
தம் கனத்த வாழ்நாளின் நெடுங் கதையை
இலைகளால் கீறும் காற்றை உராய்ந்து
கரும்புக் காட்டை நடு வகிடென பிரிக்கும்
மணல்ப் பாதையை எனக்கு முன் மஞ்சள் நிறப் ப+னை
குறுக்கே பாய்ந்து கடக்கின்றது
நாடியில் அளவான மச்சமிருக்கும்
பெண்ணின் கீழ் உதடு, பிறை நிலா
மிக அருகே பேரழகுடன் அந் நட்சத்திரம்
இந்தப் பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி
தூக்கி நடக்கின்றேன்
நீளமான நூலாய் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு, சிறுகச் சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து, நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை
ஓவியம் – கோ. கைலாசநாதன்.