
மண்டபம் அகதிகள் முகாமில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாராவது ஊடுருவி இருக்கிறார்களா என்று காவல்துறையினர் 3 நேரம் சோதனை நடத்தினர்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்புடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே மண்டபம் அகதிகள் முகாமில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி தலைமையில் 100 காவலர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை காலை 9 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான முறையில் முகாமில் யாரும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.
சோதனையின் போது யாரும் முகாமிற்கு செல்லவோ, அங்கிருந்து வெளியே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. முகாமில் வீடு வீடாக சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கு தங்கியிருப்பவர்களை வீடியோ மூலம் பதிவு செய்தனர்.
மண்டபம் முகாமில் மொத்தம் 557 குடும்பங்கள் உள்ளன. முகாமில் 2,490 பேர் தங்கி இருப்பதாகவும், சந்தேகத்திற்கிடமான முறையில் வேறு யாரும் முகாமில் தங்கவிலலை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.