மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தினார்.
மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு கிராமத்திலேயே இக்குடியேற்றம் இடம்பெறுவதாக அவர் கூநினார்.
கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இக்கிராமத்தில் ஏற்கனவே வசித்து வந்த குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் 1990ஆம் ஆண்டு தமது பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறினர்.
இப்படி வெளியேறியவர்கள் மீள் குடியேற்றத்திற்கும்,மீண்டும் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகி வரும் நிலையில் இந்த சட்ட விரோதக் குடியேற்றம் இடம் பெறுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நேற்று அந்த இடத்தைத் தாம் பார்வையிடச் சென்றிருந்த போது, பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜாவும் அங்கு வந்திருந்ததார் எனவும், இது தொடர்பாக கெவிலியாமடு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றை பிரதேச செயலாளர் செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட காணியில் சுமார் 40 கொட்டில்கள் சட்ட விரோதமான முறையில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதைத் தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.