கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊத்துச்சேணை, மற்றும் வடமுனை ஆகிய கிராமங்களில் இன்று மினி சூறாவளி வீசியுள்ளதாக மட்டு.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்துள்ளார்.
அக்கிராமங்களில், மக்கள் குடியிருந்த தற்காலிக குடிசைகள் சேதமடைந்துள்ளதுடன், மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.
இம்மீள் குடியேற்ற கிராமங்களில் வீசிய மினி சூறாவளியினால் இக்கிராமங்களில் இருந்து 80 குடும்பங்கள் இடம் பெயர்ந்து ஊத்துச்சேணை அரசினர் தமிழ் கனிஷ்ட பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இக்குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் உதவி பணிப்பாளர் இன்பராஜன் மேலும் தெரிவித்தார்.
மேற்படி கிராமங்களில் வசித்து வந்த மக்கள் கடந்த கால போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து, பின்னர் தற்காலிக குடிசைகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.