Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பு நகரில் பாரிய மனித புதைகுழி

மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரை கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடு கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றை தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் கிராம சேவகர் அரச அதிபருக்கு அறிவித்ததாகவும், அரச அதிபர் மாவட்ட நீதவான் இராம கமலனுக்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர், மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ராகுமான் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இந்த மனித புதைகுழி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் இந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். கண்டு பிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகளின் கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், புதைகுழியில் இதுவரை 4 தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த மனித புதைகுழியில் மேலும் எலும்புக் கூடுகள் காணப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version