17.10.2008.
மட்டக்களப்பில் கருணா குழு உறுப்பினர்களினால் பிள்ளையான் குழுவின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதாக காவற்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த அலுவலகத்தில் கடமையாற்றிய 13 பிள்ளையான் குழு உறுப்பினர்களையும் கருணா தரப்பு உறுப்பினர்கள் கைது செய்துள்ளனர்.
இரண்டு வருடங்களாக மீனகம் அலுவலகம் பிள்ளையான் குழு உறுப்பினர்களினால் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளையான் குழுவினால் பிரசுரிக்கப்படும் தமிழலை பத்திரிகை நிறுவனமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அளவில் ஆயுதந் தரித்த கருணா குழு உறுப்பினர்கள் பிள்ளையான் குழு அலுவலகத்தை முற்றுகையிட்டதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா குழு உறுப்பினர்கள் அலுவலகத்தில் இருந்த 20 ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அண்மைய மாதங்களில் இரு குழுவினருக்கும் இடையில் பகிரங்கமாக இடம்பெற்ற முதலாவது மோதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான கருணா அம்மான் அண்மையில் குறித்த அலுவலகத்திற்கு சென்றிருந்த போது அந்த நிகழ்வினை பிள்ளையான் பகிஷ்கரித்திருந்தார்.
விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா ஜனாதிபதியினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் நியமித்துள்ளார்.
ஏற்கனவே கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினருக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடுகளை களைய அரசாங்கம் தலையீடுகளை மேற்கொண்டு, சமரசம் செய்து வைத்தமை குறிப்பிடதக்கது.
http://www.globaltamilnews.com/tamil_news.php?nid=1233&cat=1