Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பில் அத்துமீறிய குடியேற்றம்: உடன் நிறுத்த இரா. துரைரத்தினம் கோரிக்கை.

மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் முதலமைச்சர் சி. சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடித்ததில்;

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள எல்லைக்கிராமமான கெவுளியாமடு கிராமசேவையாளர் பிரிவு இல.135இ கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின் போது அங்கு குடியிருந்த 106 குடும்பங்கள் இடம்பெயர்ந்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களில் அநேகமானோர் வேளாண்மை, மீன்பிடி, மேட்டுநிலப்பயிர்செய்கை, வியாபாரம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வந்ததோடு விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களுக்கும் மேட்டு நிலங்களுக்கும் உரித்துள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர்.

சுமார் 18 வருடகாலமாகியும் அப்பிரதேசத்தில் இருந்து வந்த யுத்த சூழ்நிலை காரணமாக உயிருக்குப்பயந்து மீண்டும் சொந்த இடம்போக முடியாமல் எப்போது சொந்த இடத்திற்குப் போவதென எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கின்றனர். இவர்கள் இடம்பெயர்ந்த போது அனைத்து பொருளாதார வளங்களையும் இழந்தனர்.

தற்போது இப்பகுதியிலுள்ள வீடு வாசல்கள் அழிக்கப்பட்டு பயிர்ச்செய்கை நிலங்கள் காடாக காட்சியளிப்பதோடு சில வயல் நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டும் சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்பட்டும் ஒருசில நிறுவனங்களினால் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டும் ஓரிரு குடும்பங்கள் வாழ்ந்தும் வருகின்றன.

இவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. கடந்தவாரம் இப்பகுதிக்கு பிரதேசசெயலாளர் தலைமையில் பார்வையிடச்சென்றபோது அத்துமீறிய குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே அரசாங்கம் தமிழ்மக்கள் வாழ்ந்த கெவுளியாமடு கிராமத்தில் நடக்கின்ற அத்துமீறிய குடியேற்றத் திட்டத்தை நிறுத்த வேண்டும்.இந்தக் குடியேற்றத்தை தற்காலிக மேற்பார்வை செய்வதற்காக இக்கிராம சேவையாளர் பிரிவு உகணைப் பிரதேசசெயலாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதை மீண்டும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பதோடு இப்பிரதேசமக்கள் மேற்படி பிரதேசத்திற்கு மீண்டும் சென்று தங்களது விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும் இதைத் தொடர்ந்து இவர்களுக்குரிய காணாமல் போன கால்நடைகளுக்குப் பதிலாக கால்நடைகளை வழங்கி மீண்டும் தொழிலை ஆரம்பிப்பதற்கும் சம்பந்தப்பட்டோர் இப்பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக இப்பிரதேசத்தில் வசிப்பதற்கும் வீட்டுத்திட்டத்தை ஒரே இடத்தில் கட்டிக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.

Exit mobile version