Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் போர்க் குற்றங்களிலிருந்து என்னை விடுவிக்கவேண்டும் : மகிந்த

வஸ்ஸமுல்லவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்கள் தனக்கு வாக்களித்து தன்னைப் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கவேண்டும் எனக் மகிந்த கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,

“ஒருமைப்பாட்டைக் கொண்ட மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நாடு ஒன்றையே கடந்த 2005 ஆம் ஆண்டு என்னிடம் எதிர்பார்த்தீர்கள். அந்த வகையில் 30 வருட பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முறியடிக்க எம்மால் முடிந்தது.

உலகின் பிரபல நாடுகளில் நிலவும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் அதிகாரமிக்க அந்த நாடுகள் இன்னும் போரிட்டு வருகின்றன. சில நாடுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் காரணமாக இன்றும்கூட பிறக்கும் குழந்தைகள் விகாரமாக பிறக்கின்றன.

எனினும் நாங்கள் சிவிலியன்களை பாதுகாத்த வண்ணமே இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால் இன்று எமக்கு சர்வதேச மட்டத்தில் பிரச்சினை வந்துள்ளது. இவற்றுக்கு எதிர்வரும் தேர்தலின்போது நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் யுத்தத்தை செய்கின்ற நிலையிலேயே அபிவிருத்திக்கான பின்னணியை உருவாக்கினோம். சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய 500 இலட்சங்களுக்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

நாங்கள் தேர்தல் குறித்து சிந்திக்காமல் அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுத்தோம். எனவே எமது நேர்மையான தீர்மானங்கள் காரணமாக மக்கள் எம்முடன் இணைந்துகொண்டனர்.

எமது இந்த முயற்சிகளின்போது பலர் காலைவாரினர். ஆனால் நாங்கள் சவால்களை வெற்றிகொண்டோம். இன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. கொழும்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராம மக்களுக்கு சேவையாற்றக்கூடிய அரசியல்வாதிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்.” எனத்தெரிவித்தார்.

Exit mobile version