இவ்வாறு வன்னிப் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட சில பகுதிகளில் கடந்த 21ம், 22ம் திகதிகளில் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களது துயரக் கதைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறிய புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் மீளக்குடியமர்த்தப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நானும் எமது கட்சித் தோழர்களும் சென்று மக்களைச் சந்தித்தோம். அவர்கள் கூறும் கதைகள் விபரிக்கமுடியாத சோகம், துக்கம் நிறைந்தவையாக இருந்தன. எங்கும் யூ.என்.எச்.ஆர் அடையாளமிடப்பட்ட தறப்பாள்களின் கீழேயே மக்கள் தத்தமது முன்னைய இடங்களில் குடியமர்ந்துள்ளனர். அதே இடங்களில் அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டும் சிதைத்து தரைமட்டமாக்கப்பட்டும் உள்ளன. ஆங்காங்கே இருந்து வந்த கல்வீடுகளில் எல்லாவற்றிலும் சீற் கூரைகள், கதவு, நிலைகள் யாவும் உடைத்தெடுக்கப்பட்டுள்ளன. ஷெல் வீச்சினால் உடைந்த வீடுகளையும் காணமுடிந்தது. வீதியோர வீடுகள் யாவும் இடித்து இருந்த இடம் தெரியாதவாறு அகற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரிழப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றன. தருமபுரம் கிழக்கில் உள்ள ஒரு வயதான தாயின் மூன்று பெண் பிள்ளைகளின் மூன்று கணவர்மாரும் ஒரு பேரக்குழந்தையும் யுத்தத்தின் போது உயிரிழந்த சோகக் கதையைக் கூறி கண்ணீர் வடித்து நின்றனர். இருபத்து நான்கு வயதான கடைசி மகளின் எட்டு வயது மகன் ஷெல் பட்டு இறந்த பரிதாபத்தைக் கூறி தனது இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அவ் இளந்தாய் ஏங்கி நின்ற போது அவருக்கு ஆறுதல் கூற எம்மிடம் வார்த்தைகளே இல்லை. அரசாங்கத்தின் நிவாரணம் அதுவும் கோதுமை மாவே அதிகமாகத் தருவதாகவும் வேறு கொடுப்பனவுகள் ஆரம்பநிலை ஐயாயிரம் ரூபாவைத் தவிர வேறு எவையும் இல்லை எனக் கூறினர். விசுவமடுவில் ஒரு பகுதியில் மட்டுமே மீளக்குடியமர்வு இடம் பெற்றிருக்கிறது. மற்றொரு வீட்டிற்குச் சென்று கதைத்தபோது சோகம் தாங்க முடியாது குளறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது. ஒரு மகன் இறுதி நேர ஷெல் வீச்சில் இறந்து விட்டதையும் மற்றொரு மகனைக் கட்டாயப்படுத்தி இயக்கம் கூட்டிச் சென்று சாகவைக்கப்பட்டதையும் மற்றொரு மகன் தடுப்பு முகாமில் இருந்து வருவதையும் ஒரு தாய் அழுதழுது கூறியபோது பெருமூச்சே நமக்கு வந்தது.
இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு உயிரிழப்;பின் வேதனைகளும் தரும் படுகாயங்கள் பட்ட அடையாளங்களையும் யுத்த இறுதிக்கால அவலக் கதைகளையுமே கேட்கவும் காணவும் முடிந்தது. 2ம் ப.பா
2
மீளக்குடியமர்ந்த மக்கள் படும் வேதனைகளும் துயரம் தொடர்ந்த வாழ்வும் அவர்களது ஏக்கப் பெருமூச்சுகளும் ஏன் தான் தமிழர்களாகப் பிறந்தோம் என்ற ஒருவகை விரக்தி நிலையை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. ஒரு பெரியவர் கூறினார் ‘இப்படி எம்மை மீளக்குடியமர்த்தி கொடுமைப்படுத்துவதை விட தொடர்ந்தும் முகாம்களிலேயே அடைத்து வைத்திருக்கலாம்’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதே வேளை மீளக்குடியமர்;த்தப்பட்ட பகுதிகளின் மூலை முடுக்குகளில் எல்லாம் இராணுவத்தினர் பரந்து இருந்து வருகிறார்கள். அரசாங்க நிர்வாக நடவடிக்கைகள் பெயரளவிற்கு இயங்கி வருகின்றன. இன்னும் மீளக்குடியமர்த்தப்படாத பகுதிகள் இருந்துவருகின்றன. இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் படும் பாடுகள் சொல்லில் கூற முடியாதவைகளாகக் காணப்படுகின்றன.
ஜனாதிபதியும் அமைச்சரவையும் கிளிநொச்சியில் வந்து கூடிக் குலைந்திருக்கிறார்கள். ஜனாதிபதியானவர் தனது உரையில் அரசாங்க ஊழியர்களின் தலைகளில் பொறுப்பைச் சுமத்திவிட்டு விலகிச் சென்றுள்ளார். அமைச்சர்கள் அது தருவோம் இது செய்வோம் என்ற கூறிச் செல்வதற்கு அப்பால் எதுவும் அங்கு இடம்பெறவில்லை. கிளிநொச்சி உட்பட வன்னி எம்மிடம் உள்ளது எனக் கூறுவதில் உள்ள அக்கறை மீளக்குடியமர்ந்த மக்களின் மேல் இல்லை என்றே கூறவேண்டும்.
அதே வேளை தமிழ்த் தேசியம், தமிழ் உணர்வு, தமிழ்த் தேசிய இனம் பற்றியெல்லாம் உச்சமாகப் பேசுவோர் மீளக் குடியமர்ந்த வன்னி மக்களை ஏறெடுத்தும் பார்ப்பதாக இல்லை. அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து கூட்டு முயற்சியாக வன்னி மக்களின் மீளக்குடியமர்விற்குக் கைகள் கொடுப்பதற்கு வசதி படைத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவுவதாக இல்லை. அதே வேளை கோவில்கள் கோபுரங்கள் கோடி ரூபாய் செலவு செய்து குடாநாட்டில் திருவிழாக்களும் ஏனைய ஆடம்பரங்களும் காட்டப்படுகின்றன. கொழும்பில் தமிழர்கள் பெரும் ஆடம்பர விழாக்கள் எடுத்து மகிழ்கின்றனர். ஐந்து நட்சத்திர விடுதிகளில் திருமணங்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் லட்சம் லட்சமாகச் செலவிட்டு நடாத்தப்படுகின்றன. அதே வேளை சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைக்காக வந்து மீளக்குடியமர்ந்த மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்துச் செல்வதற்கு அப்பால் எதுவும் அங்கு இடம்பெறவில்லை. முற்றிலும் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்ட வன்னி மக்களின் புனரமைப்பும் மறுவாழ்வும் முன்னெடுக்கப்படுவதற்கு அரசாங்கத்திற்கு அப்பால் அனைத்து கட்சிகளும் பொது அமைப்புகளும் புலம் பெயர்ந்த வசதி படைத்த தமிழர்களும் இணைந்த ஒரு திட்டமிடப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும் என்பதையே எமது கட்சி ஒரு ஆலோசனையாக முன்வைக்கிறது.
இதனைச் செயற்படுத்தாது வெறும் வாக்கு வங்கிகளுக்காக மீளக் குடியமர்ந்த மக்களை நாடிச் சென்;று வெறும் வார்த்தைகள் வாக்குறுதிகள் அளிப்பது அர்த்தமற்றதாகும். வன்னி மக்களை வேறொரு உலகமாகப் பார்க்கும் நமது சுயநலம் மிக்க தமிழர் சமூகம் தமது பார்வையை மாற்ற முன்வரவேண்டும். அவர்கள் பாவப்பட்ட மக்கள் அல்லர். பேரினவாத இராணுவ ஒடுக்கு முறையாலும், தமிழர் தலைமைகளாலும் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு நம்பி;க்கைத் துரோகம் செய்;யப்பட்ட மக்களாவர். ஒரு புறத்தால் இராணுவ ஒடுக்கு முறைக்கும் மறுபுறம் நம்பவைக்கப்பட்டு நடுத்தெருவில் கொலைக்களத்தில் கைவிடப்பட்டோம் என மக்கள் தமது சொந்த தலைவிதியை நொந்து நொடிந்து நிற்பதையே காணமுடிகிறது. எனவே விவசாயிகளும் தொழிலாளர்களும் உழைப்பாளிகளுமான மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு விரைவான திட்டமிடப்பட்ட அடிப்படை உதவிகள் வழங்கப்படுவதன் மூலமே அவர்களின் தற்போதைய அவல வாழ்விலிருந்து மீட்க முடியும் என்பதே நாம் காணும் யதார்த்தமாக உள்ளது.
மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் பொதுக்கூட்டம்
இயல்பு வாழ்வை ஜனநாயகத்தை அரசியல் தீர்வை வென்றெடுக்க மக்களே அணி திரள்வீர் என்னும் தலைப்பின் கீழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடிப் பிரச்சினைகளை உள்ளடக்கிய பத்துக் கோரிக்கைகளான
¨ அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறை!
¨ வாழ்க்கைச் செலவை அதிகரிக்காதே!
¨ சம்பள உயர்வை உடன் வழங்கு!
¨ மீள் குடியேறிய மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கு!
¨ மக்களின் அகதி வாழ்வுக்கு முடிவு கொண்டு வா!
¨ அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்!
¨ காணாமல் போனோர் பற்றிய விபரங்களை வெளியிடு!
¨ உயர் பாதுகாப்பு வலயங்களுக்காகத் துரத்தப்பட்ட மக்களின் வாழ்விடங்களில் மீளவும் வாழ விடு!
¨ 1990ல் விரட்டப்பட்ட முஸ்லீம் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப வழி வகை செய்!
¨ சிதைக்கப்பட்ட கல்வி சுகாதாரத்தை சீரமைப்புச் செய்!
என்பனவற்றை முன்வைத்து அவற்றை வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி யாழ் நகரத்தில் நடாத்துகின்றது. எதிர்வரும் 31.07.2010 சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் ப.நோ.கூ.சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இக் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தலைமை தாங்குகிறார்.
இக் கூட்டத்தில் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்களான சட்டத்தரணி இ.தம்பையா, வெ.மகேந்திரன், சட்டத்தரணி சோ.தேவராஜா, க.தணிகாசலம், ச.பன்னீர்செல்வம், கா.கதிர்காமநாதன் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன இயக்கம் சார்பாக மு.தியாகராசா, ரி.வி.கிருஷ்ணசாமி ஆகியோர் உரையாற்றுவார்கள்.