Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களுக்கான மாற்று அரசியலை நோக்கி!:புதிய-ஜனநாயக கட்சி

 

மக்களுக்கான மாற்று அரசியலை நோக்கி!

 இதுவரையான 63 வருடகால பாராளுமன்ற அரசியல் பாதையில் எமது மக்கள் பல தடவைகள் வாக்களித்து வந்துள்ளனர். பிரதானமாகத் தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் முன்னின்று வந்துள்ளன. இவர்கள் தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிராகத் தூர நோக்கில் அமைந்த சரியான கொள்கைகளை முன்வைக்காது காலத்திற்குக் காலம் வெறுமனே இன உணர்ச்சி முழக்கங்களையும் சாத்தியமற்ற கொள்கைகளையும் முன்வைத்து பாராளுமன்ற ஆதிக்க அரசியலையே நடாத்தி வந்துள்ளனர். அத்தகைய தலைமைகளால் மக்களுக்காக எதனையும் சாதிக்க முடியவில்லை. இது ஏன் என்பது தான் இத் தேர்தல் களத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய கேள்வியாகிறது.

 இன்று தமிழ் மக்களின் நிலை என்ன? அதற்கான அரசியல் காரணங்கள் யாவை? தமிழ்த் தலைமைகள் முன்னெடுத்த கொள்கை நிலைப்பாடுகள் எவை? இவை யாவும் அரசியல் ரீதியில் மக்கள் மத்தியில் ஆழ்ந்து சிந்திக்கப்படல் வேண்டும். ஒரு புறத்தில் ஆளும் வர்க்கப் பேரினவாத ஒடுக்குமுறைகள். மறுபுறத்தில் குறுந்தேசிய இனவாத அரசியல் தலைமைகள் பின்பற்றி வந்த பிற்போக்குக் கொள்கைகள.; இவை ஒன்றுக்கொன்று ஊட்டமளித்து வந்தனவற்றின் விளைவே 63 வருட பாராளுமன்ற ஆசன அரசியலும், முப்பது வருட கோர யுத்தமுமாகும். அவற்றின் ஒட்டு மொத்தப் பெறுபேறே கடந்த வருட நடுப் பகுதியில் வன்னி யுத்தத்தின் போது இடம் பெற்ற பல்லாயிரக் கணக்கான எமது மக்களின் உயிரிழப்புகளும், உடைமை அழிவுகளும், இடப் பெயர்வுகளுமாகும். வரலாறு காணாத பேரவலமாக மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு கண்ணீர் சிந்திய சோகத்தை எமது மக்கள் அனுபவிக்க முடிந்தது. இன்றும் அதன் துயரங்களும் சோகங்களும் உழைக்கும் மக்கள் மத்தியில் தொடர்கின்றன.

 இத்தகைய மனிதப் பேரவலங்களுக்குப் பதில் கூற வேண்டியவர்கள் ஆளும் வர்க்கப் பேரினவாதத் தலைமைகள் மட்டுமல்ல. நமது மக்களுக்குத் தலைமை தாங்கி வந்த அனைத்துத் தமிழ்த் தலைமைகளுமாகும். பாராளுமன்ற ஆசனங்களில் குறியாக இருந்த இத் தலைமைகளுக்கு மக்களுக்கான அரசியல் பாதையில் நேர்மையாக வழிகாட்டிச் செல்ல முடியவில்லை. இன்றும் கூட தமது கடந்த காலம் பற்றிய எவ்வித சுயவிமர்சனமோ, கூச்சமோ, குற்ற உணர்வோ இன்றி பாராளுமன்ற ஆசனங்களுக்காகப் பழைமைவாத ஆதிக்க அரசியல் போக்குடன் மீண்டும் மக்கள் முன் வந்து நிற்கிறார்கள்.

 அவ்வாறே கடந்த முப்பது வருடகால யுத்தத்தை முன்னெடுத்த பேரினவாதக் கட்சிகளும் அதற்கு துணை நின்றவர்களும் தத்தமக்கு வாக்களிக்குமாறு கேட்டு அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி நிற்கிறார்கள். தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை வாழ்வுரிமைகளுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க முடியாத இப் பேரினவாதக் கட்சிகள் வெறும் சலுகைகளையும், கண்துடைப்பு நடவடிக்கைகளையும், நாம் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்ற ஏமாற்று வாக்குறுதிகளையும் வழங்கி நிற்கிறார்கள். இத்தகைய சக்திகளின் நிறங்களையும் குணங்களையும் கடந்த கால நிகழ்வுகளுடன் நினைவு படுத்திப் பார்த்து இச் சந்தர்ப்பத்தில் மக்கள் அரசியல் ரீதியில் சிந்தித்து கேள்விகள் எழுப்பி நிற்க வேண்டும். யாராயினும் பழைய அதே பாதையில் பயணிப்பதால் எவ்வித மாற்றமும் ஏற்பட மாட்டாது என்பது உணரப்படவேண்டும். அதே வேளை புதிய மாற்று அரசியல் பற்றி  மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் ஆழ்ந்து சிந்திக்கவும் செயல்படவும் முன்வரல் வேண்டும். இல்லாதவிடத்து வேதாளம் மீண்டும் முருங்கையில் என்ற கதையாகி தமிழ் மக்கள் மற்றொரு அரசியல் வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லப்படும் அபாயம் தோன்றவே செய்யும்.

 எனவே உழைக்கும் மக்களான தொழிலாளர்கள்,விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், ஆசிரியர்- மாணவர்கள், அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் எதிர்காலத்தை நோக்கிய மாற்று அரசியல் பாதையில் பயணிக்க அணிதிரள வேண்டும். நமது நாட்டின் வரலாற்றுப் பட்டறிவின் மூலமாகவும் உலக மக்களின் போராட்ட அனுபவங்களின் வாயிலாகவும் தோற்றுவிக்கப்படும் மாற்று அரசியல் மார்க்கமே விடிவையும் விடுதலையையும் தரவல்லதாகும். அதற்கான அரசியல் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய ஒரு சந்தர்ப்ப சூழலை இப் பாராளுமன்றத் தேர்தல் ஏற்படுத்தி நிற்கிறது. இனவாதம், மதவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் வெறும் தமிழ் உணர்ச்சிமயம் போன்றவற்றின் ஊடாக வாக்குகள் திரட்டி ஆசனங்களைப் பெறுவது மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்படும் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களின் எதிர்கால இருப்பையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் வென்றெடுக்கத்தக்க மாற்று அரசியலை இத் தேர்தலின் ஊடாக முன்னெடுக்க மக்களை அணிதிரட்ட வேண்டும். அத்தகைய அரசியல் பாதையில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு தேசியவாத சக்திகள் எவ்வித தயக்கமும் இன்றி பொது வேலைத்திட்டத்தின் ஊடாக ஐக்கியப்பட வேண்டுமென புதிய ஜனநாயக கட்சி வற்புறுத்தி நிற்கிறது.

 நாம் வெறும் பாராளுமன்ற ஆசனங்களுக்காக இத் தேர்தல் அரங்கிற்கு வந்து நிற்பவர்கள் அல்லர். கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக நேர்மையான பொதுவுடைமை வாதிகளாகவும் புரட்சிகர சக்திகளாகவும் இருந்து அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடி வந்தவர்கள். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அவற்றை வென்றெடுத்தவர்கள். தமிழர்கள் மத்தியில் நீடித்து வந்த சாதிய தீண்டாமைக்கு எதிராகத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினூடே வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள். அதனால் உயிர்த் தியாகங்களும் போராட்டத் தழும்புகளும் பெற்றவர்கள். கடந்த முப்பது வருட பேரினவாத ஒடுக்குமுறை யுத்தத்தின் மத்தியில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்தும் ஆதிக்க சக்திகள் எதற்கும் அடிபணிந்து துனை போகாமலும் மக்களின் பக்கம் உறுதியாக நின்று குரல் கொடுத்துப் போராடி வந்தவர்கள்.

 அத்தகைய நேர்மையான சமூக மாற்றத்திற்குரிய மக்கள் சார்பு நிலைப்பாட்டுடனேயே இத் தேர்தலில் எமது கட்சியின் சுயேட்சைக் குழு இலக்கம் 6ல் கேத்தல் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மக்களுக்கான மாற்று அரசியலை நோக்கி என்பதனை அங்கீகரித்து முன்னெடுக்கும் ஒர் அடையாளமாக எமக்கு வாக்களிக்கும்படி மக்களை வேண்டி நிற்கின்றோம். உங்கள் வாக்குகளை அரசியல் அர்த்தத்துடனும் மக்களின் அபிலாஷைகளுக்குமான பெறுமதி மிக்க அடையாளமாகவும் எமது கேத்தல் சின்னத்திற்கு வழங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வரலாற்றுப் பட்டறிவோடு
கேத்தல் சின்னத்திற்கு வாக்களியுங்கள்
!

Exit mobile version