Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களின் சொத்தைக் கொள்ளையடிப்பது தவறில்லை : தமிழக சினிமாத்துறையினர்

jeylalitha_protestதமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர்கள் பட அதிபர்கள் உண்ணாவிரதமிருந்தனர். ஒரு குற்றவாளி அதுவும் பல கோடி பெறுமானமுள்ள ஏழைகளின் சொத்தைக் கொள்ளையடித்த ஒருவர் 18 வருட காலமாக நீதித்துறையை அவமதித்து, இந்தியச் சட்டங்களை இழிவுபடுத்தி வழக்கைக் காலம் தாழ்த்தியவர் தண்டிக்கப்படும் போது அதனைத் தவறு எனக்கூறிப் போராட்டம் நடத்தும் அவமானகரமான செயல் இப்போராட்டம்.

ஈழப் போராட்டத்தில் மூக்கை நுளைத்து அதனை வியாபாரமாக்குவதில் கணிசமான பங்கு வகித்த சினிமாத் துறையினரின் இந்த உண்ணாவிரதம் கலைத்துறைக்கு அவமானம்.

தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த உண்ணாவிரதம் நடந்தது. அங்கு திரையுலக முக்கிய பிரமுகர்கள் அமர மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் தர்ம தேவதைக்கு அநீதியா? என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டு இருந்தது. எதிரில் பெரிய உண்ணாவிரத பந்தலும் போடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்துக்கு காலை 8 மணிக்கே திரையுலகினர் வரத் தொடங்கினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசும்போது, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். ஜெயலலிதா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும் என்றார்.

பின்னர் உண்ணாவிரதம் துவங்கியது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர் அலிகான், மயில்சாமி, சரவணன், குண்டு கல்யாணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர்.கே.செல்வமணி, ரவிமரியா, ஆதி ராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர், ராதாகிருஷ்ணன், கில்டு ஜாகுவார் தங்கம், சவுந்தர், சுப்பையா, விநியோகஸ்தர் சங்கம் அருள்பதி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) செயலாளர் சிவா, தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், கமலா தியேட்டர் உரிமையாளர் சி.த.வள்ளியப்பன், விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது.

உண்ணாவிரதம் நடந்த பகுதியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்தை தொடர்ந்து சென்னையிலும் சென்னை புறநகர் பகுதியிலும் சினிமா படப்பிடிப்புகள் இன்று ரத்து செய்யப்பட்டன.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று காலை தியேட்டர் அதிபர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் ஹரி கோவிந்த், லேனாசுப்பு, கஜேந்திரன், மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version