பாராளுமன்றத்தில் இது தொடர்பாக காரசாரமான உரையாற்றுகைகள் நடைபெற்றதுடன், பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதே வேளை லண்டனிலிருந்து நாடு திரும்பிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விமனா நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், விமான நிலைய விசேட விருந்தினர் பிரிவில் சமய அனுஷ்டான நிகழ்வும் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் 03.12.2010 வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது டலஸ் அழகப்பெரும, லண்டனில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் ஒரு கையில் புலிககொடியையும் இன்னொரு கையில் சரத் பொன்சேகாவின் படத்தையும் வைத்திருக்கின்றனர். நந்திக்கடலோரத்தில் பயங்கரவாதத்தை சவக்குழியில் புதைத்தோம். 30 வருட பாலமாக பிரிவினைவாத கோஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தோம். ஆனால் பிரிவினைவாதம் இன்று வேறு வகையில் தலையெடுக்க முயற்சிக்கின்றது. அதன் வெளிப்பாடுகளை நாம் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தோம். அதனை எதிர்ப்பதற்கு இந்நாட்டு மக்கள், கட்சிகள் அனைத்தும் இதயத்தால் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டது. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டப் பேரணியில், வெள்ளைப் புலியே உடனடியாக வெளியேறு, புலிகளுடன் உறவு வைத்திருக்கும் பிரித்தானியாவே உனக்கு வெட்கமில்iயா?, நாம் என்றும் அடிபணியப் போவதில்லை போன்ற கேஷங்களும் எழுப்பப்பட்டது.
இதேவேளை பிரித்தானியாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் எனக்கூறி ஐ.தே.க.வின் ஜயலத் ஜயவர்த்தனாவை பாராளுமனற்த்தில் வைத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்டதுடன், அவருக்கெதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்வும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை மறுத்துள்ள ஜயலத், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க்குற்றச்சாட்டுக்களால் தான் உளரீதியிலான உளைச்சல் அடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஜயலத்தை விசாரிக்க தெரிவிக்குழு அமைக்கப்படுவதில் ஆட்சேபனை எதுவுமில்லையென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.
விடயம் குறித்து லண்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவத்த ஜி.எல்.பீரிஸ், ‘பேச்சு சுதந்திரம் அனுபவிக்கும் நாடொன்றில் பேச்சாளர் ஒருவர் மௌனமாக்கப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது” எனவும் ‘விடுதலைப் புலிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் அடங்கிய சிறிய குழுக்கள் ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளில் வெற்றியடைய முழு சமூகத்தையும் பணயம் வைத்திருப்பதாகவும்” குறிப்பிட்டிருக்கிறார்