மகிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாக ஜனாதிபதியான பின்னர் திம்புவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்துப் பேசினார். இலங்கையில் இந்தியப் பொருளாதாரம் குறித்தும், அபிவிருத்தி மற்றும் கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் உச்சி மாநாட்டின் இடைவேளையில் கிராண்ட் ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்ந்த இதே போன்றதொரு சந்திப்பு கடந்த வருடம் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டின் இடைவெளியிலும் நடைபெற்ற சில நாட்களிலேயே இந்திய ஆதரவுடன் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீதான இனவழிப்ப்பு யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டது. ஒரு சில மாதங்களில் ஒரு லட்சம் வரையிலான அப்பாவிகளைப் பலிகொண்டு, நாற்பதாயிரம் பேர் வரையில் ஊனமான இந்த யுத்தத்தம் இந்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.
முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இனச் சுத்திகரிப்பு, இனவழிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களை தொடர்ந்து நிகழ்த்தும் இலங்கை அரசுடன் இணைந்து பயங்கரவாத்திற்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறும் இந்திய அரசின் முழுமையான ஒத்துழைப்புடனேயே தமிழ்ப் பிரதேசங்களில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் நோக்க முடியும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டனர்.