பல்கலைக்கழகங்களில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களுக்கு வரக் கூடாது. இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பொது மக்களின் நிதியை மோசடிசெய்து பிறந்தநாள் மற்றும் பதவி ஏற்பு விழாக்களுக்காக கோடி கணக்கில் செலவிடும் அரசாங்கத்திற்கு நூறு ரூபாய் செலவழித்து பல்கலைக்கழகத்திற்கு புல்லாங்குழல்களை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
வெளிநாட்டு பயணங்களை கொடுத்தும் நிதிகளை வழங்கியும் மாணவர்களின் போராட்டத்தை அரசாங்கத்தினால் அடக்க முடியாது. அதற்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள் தான் உகந்தவர்களாவர் எனவும் அந்த ஒன்றியம் தெவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதானை சி.எஸ். ஆர். மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதி ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கூறுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் செல்ல உள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்க கூடியதாக இந்த விஜயத்தை நாம் பார்க்கிறோம். பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கடிதமொன்றை விரைவில் நாம் ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம்.
ஏனெனில் பல்கலைக்கழகங்களில் மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க முடியாதளவிற்கு பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளன.
மாணவ சமூகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதாக கூறும் அரசாங்கத்தினால் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.