Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த சிந்தனை இலங்கையின் பொருளாதாரத்தை சரித்து விட்டது;அமைச்சர்கள் சொகுசு வாழ்க்கை!:கபீர் ஹாசிம் .

25.10.2008.

புஷ் சிந்தனை அமெரிக்க பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியதைப் போல் மகிந்த சிந்தனை இலங்கையின் பொருளாதாரத்தை சரித்து விட்டதாகக் குற்றம் சாட்டிய ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், வெளிநாடுகளிடம் கடன் வாங்கி அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்கு செலவழிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேச வங்கி தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

“”மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இலங்கையில் என்றுமில்லாதவாறு பணவீக்கம் அதிகரித்துள்ளது. பணவீக்கம் பயங்கரவாதத்தை விட மோசமானது. பயங்கரவாதம் என்னும் இராட்சதனை பிரபாகரன் நெறிப்படுத்துகிறார். பணவீக்கம் என்னும் இராட்சதனை நிதியமைச்சர் நெறிப்படுத்துகிறார்.

பணவீக்கம் அதிகரித்துள்ளதனால் நாட்டு மக்களின் சொத்துகள் சுரண்டப்படுகின்றன. இதன் மூலம் சிலர் செல்வந்தராகின்றனர். பலர் பிச்சைக்காரர்களாக மாறி விட்டனர்.

பணவீக்கம் அதிகரித்துள்ளதனால் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில் இலங்கையிலேயே அதி குறைந்த சேமிப்பு வீதம் காணப்படுகின்றது. பணவீக்கத்திலும் குறைவாகவே வட்டி வீதம் காணப்படுகின்றது. இதன் மூலம் மக்களின் பணம் கொள்ளையிடப்படுகின்றது. மக்களின் பணத்தை சுரண்டி அரசு வயிறு வளர்க்கின்றது.

ஆடை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் கொடுப்பதென்றால் இறப்பர், தேயிலை உற்பத்தியாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். இது அரசின் கடமை.

மகிந்த சிந்தனை புஷ்ஷின் சிந்தனைக்கு ஒப்பானது. புஷ் சிந்தனையால் அமெரிக்க பொருளாதாரமே சரிந்தது. அதேபோல் மகிந்த சிந்தனையால் இலங்கையின் பொருளாதாரம் சரிந்து விட்டது. புஷ் ஈராக் யுத்தத்திற்கு பெருமளவு நிதியை செலவிடுகின்றார். மகிந்த புலிகளுக்கெதிரான யுத்தத்திற்கு பெருமளவு நிதியை செலவிடுகின்றார்.

நியூஸிலாந்தில் பணவீக்கம் ஏற்பட்ட போது அந்நாட்டின் ஆளுநர் உடனடியாக பதவி விலகினார், அப்படிப் பார்த்தால் எமது மத்திய வங்கி ஆளுநர் 10 தடவைகளுக்கு மேல் ராஜிநாமா செய்திருக்க வேண்டும்.

Exit mobile version