Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த சிந்தனையின் கீழ் நாட்டில் இடம்பெறும் இரு பெரும் யுத்தங்கள்:காலகண்டன்.

23.08.2008.

இன்றைய இலங்கையில் மகிந்த சிந்தனையின் கீழ் இரண்டு பெரும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, தேசிய இனப் பிரச்சினை காரணமான யுத்தம், இரண்டாவது பொருளாதார நெருக்கடி வடிவிலான யுத்தம். இவ்விரண்டு யுத்தங்களின் காரணமாக இந்நாட்டு மக்களில் தொண்ணூ<று வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து இரத்தத்திலும் கண்ணீரிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பத்து வீதத்திற்கு உட்பட்ட மிகப் பெரும் சொத்துடமை படைத்தவர்களும் சுகபோக அரசியல் நடத்துவோரும் அதி உயர் அரசாங்கப் பதவிகளில் இருப்போரும் உயர்நிலை அதிகாரிகளும் தகுந்த பாதுகாப்புகளுடன் ஆடம்பர வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மூழ்கி எழுந்து வாழ்வு நடாத்தி வருகிறார்கள். எங்கும் எதிலும் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பன தாராளமாக நடைபெற்று வருகின்றன. இவ் ஊழல் மோசடிகளைக் கண்டறிவதற்காக ஒரு பாராளுமன்றக் குழு உருவாக்கப்பட்டிருந்தது. அதன் தலைவராக ஆளும் கட்சியைச் சேர்ந்த விஜயதாச ராஜபக்ஷ பா.உ.தெரிவு செய்யப்பட்டும் இருந்தார். அவர் தலைமையிலான ஊழல் மோசடிகளைக் கண்டறியும் ""கோப்' எனப்படும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவானது இருபத்தியாறு நிறுவனங்களில் இடம் பெற்ற நூற்றியம்பது மில்லியன் ரூபா மோசடி ஊழல் பற்றி கண்டறிந்து அவற்றிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனச் சிபாரிசு செய்தும் கொண்டது. ஆனால், அந்த சிபாரிசும் அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.அதனை வலியுறுத்தி நின்ற விஜயதாச ராஜபக்ஷ தனது மனட்சாட்சியின் படி அப்பதவியை உதறி எறிந்து விட்டு எதிர்த்தரப்பில் வந்து அமர்ந்து கொண்டார். இச் சம்பவமானது அரசாங்க உயர் மட்டமும் நிறைவேற்று அதிகாரமும் ஊழல் மோசடி விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதற்குரிய அளவுமானியாகும். அண்மையில் குருநாகலில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ ""இந்நாட்டின் தெருக்களில் பிச்சை எடுப்பவர்கள் அருந்தும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்கும் கூட வற் வரி செலுத்துகிறார்கள்' என்று சுட்டிக்காட்டினார். இத்தகைய வரிகள் மூலம் பெறப்படும் பணம் தான் அரசாங்க உயர்மட்டத்தால் ஊழலுக்கும் மோசடிக்கும் வீண் விரயங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றது. அதற்கு ஒரு உதாரணம் தான் தற்போதைய திறைசேரி செயலாளர் ஏற்கனவே நடந்து கொண்ட முறையற்ற அரசாங்கச் சொத்து கை மாற்றிய விவகாரத்திற்காக உயர் நீதி மன்றத்தால் ஐந்து லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதே போன்று ஏற்கனவே ""கோப்' எனப்படும் பாராளுமன்றத் தெரிவுக்குழு கண்டறிந்த இருபத்தியாறு அரசாங்க பொது நிறுவனங்களில் இடம் பெற்ற ஊழல் மோசடிகள் முறையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்படுமானால் பல அரசாங்க உயர்மட்டக் கனவான்களின் வண்டவாளங்கள் சந்திக்கு வந்து விடும். அவர்கள் அணிந்திருக்கும் தூய வெண்ணிற ஆடைகளுக்குப் பின்னால் உள்ள கையாடல்கள் அம்பலத்திற்கு வந்திருக்கும். ஆனால், அவை ஒன்றும் அப்படி வெளிவருவதற்கு சந்தர்ப்பம் எதுவும் இன்றைய பாராளுமன்ற ஆட்சி அமைப்பின் கீழ் இடம் பெற மாட்டாது. ஏனெனில் எல்லாம் வல்ல நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அதற்கு இடமளிக்க மாட்டாது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கு நிறைவேற்றப்பட்ட 17 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வராதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டு வருகிறது. அத் திருத்தத்தின் கீழ் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, சுதந்திர பொலிஸ் ஆணைக்குழு, பொது நிர்வாக ஆணைக்குழு என நியமிக்கப்பட்டு நடைமுறையில் இயங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் ஆணையாளர் வெறும் அபிப்பிராயம் தெரிவிப்பவராக மட்டுமே இருந்து வருகிறார். இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுக்கும் மோசடிகளுக்கும் எதிராக எதனையும் செய்ய முடியாத அதிகாரமற்ற ஆணையாளராகவே கருமமாற்றி வருகிறார். அவ்வாறே இன்றைய காவல்துறை அரசாங்கத்தின் கையாளாகச் செயல்படுகிறதே தவிர சுதந்திரமான சட்டம் ஒழுங்கின் காவலர்களாக இல்லை என்பதற்கு ஏராளம் உதாரணங்களைக் காட்ட இயலும். அவற்றில் ஒன்று தான் அடிதடி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றம் ஒரு தடவைக்கு இரு தடவை பிடியாணை பிறப்பித்தும் அவர் கைது செய்யப்படவில்லை. இரண்டாவது தடவையாக கொழும்பு பிரதான நீதிமன்றம் நேரடியாகவே பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்ட பின்பும் எந்த ஒரு பொலிஸ் அதிகாரியாலும் அந்த அமைச்சரை அணுக முடியவில்லை. அதேவேளை கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஊடகவியலாளர்கள் அமைப்புகள் நடாத்திய ஆர்ப்பாட்டம் காரணமாகவே மேற்படி அமைச்சர் தானாக நீதிமன்றத்தில் சரணடைந்து பிணையில் சென்றுள்ளார். இங்கே சுட்டிக் காட்டப்பட்டுவது யாதெனில் சட்டம் சகலருக்கும் சமம் என்றால் காவல்துறை சுதந்திரமானதென்றால் ஏன் அந்த அடிதடி அமைச்சரை அணுகி கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை என்பது தான். இது எதைக் காட்டுகிறது. நாட்டின் ஏழை பாழைகளான சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, ஒரு சட்டம், ஒரு காவல்துறை அணுகுமுறையும் வசதி வாய்ப்புப் பெற்ற ஆளும் தரப்பினருக்கு வேறெரு நீதி, வேறொரு சட்டம், வேறொரு கால்துறை அணுகுமுறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இந் நிலைக்கு ஆட்சி அதிகார உயர்நிலை நிற்போர் வழங்கி வரும் ஆதரவும் அரவணைப்பும் மட்டுமன்றி வழிகாட்டல்கள் வழங்கப்படுவதுமே அடிப்படைக் காரணமாகிறது. இத்தகைய சூழலில் தான் முன்பு கூறிய இரண்டு யுத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய இனப்பிரச்சினை காரணமாக முன்னெடுக்கப்படும் யுத்தம் பயங்கரவாத ஒழிப்பின் பெயரிலேயே இப்போது நடாத்தப்படுகிறத. அமெரிக்காவும், நோட்டோ நாடுகளும் இவ்வாறான மகுடத்தின் கீழ்த்தான் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொடிய ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடாத்தி வருகிறது. இங்கு கடந்த மூன்று தசாப்த காலத்தில் வடக்கு, கிழக்கு மீது தொடுக்கப்பட்டுவந்த யுத்தமும் பல்வேறு பெயர்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதுவே இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனப் பரப்புரை செய்யப்பட்டு இறுதி யுத்தம் எனக் கூறி முன்னெடுக்கப்படுகிறது. இந்த யுத்தத்தால் இன்று மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் இரண்டு லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகி நிர்க்கதிகளுக்கு உள்ளாகி உள்ளனர். இருப்பிடம் உட்பட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் பசி பட்டினியுடன் காடுகளிலும் மர நிழல்களிலும் இருந்து வரும் அவலத்தை அனுபவிக்கின்றனர். அங்கு அரசாங்கத்தின் கவனிப்பு இம் மக்களுக்கு எவ்வகையிலும் ஆறுதல் அளிப்பதாக இல்லை. அதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி நடவடிக்கைகளும் மிகமிக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலை வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து பட்டினிச் சாவுச் செய்திகள் வரக் கூடிய அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது. தமிழ் மக்கள் பல்குழல் பீரங்கிகளாலும், எறிகணை வீச்சுக்களாலும், விமானத்தாக்குதல்களாலும் யுத்தமுனை இராணுவ முன்னேற்ற நகர்வுகளாலும் நாளாந்தம் செத்து மடிந்து வருகின்றனர். இத்தகைய சாவுகள் தெற்கிலே பயங்கரவாத எதிர்ப்பு யுத்தமாகக் காட்டப்படுகின்றது. இன்று நடைபெற இருக்கும் இரண்டு மாகாணசபைகளுக்கான தேர்தல் பிரசார மேடைகளில் அரசாங்கத்தரப்பும், ஜனாதிபதியும் உரத்து முழங்கிய அரசியல் முழக்கம் பயங்கரவாதத்தை முறியடிக்க எமக்கு வாக்களியுங்கள் என்பதாகவே அமைந்திருந்தது. இது தனியே வடமத்திய சப்ரகமுவ மாகாண மக்களுக்கு மட்டும் எடுத்துக் கூறப்பட்ட ஒன்றல்ல. முழுத் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் ஏற்றப்பட்ட மேலதிகப் போர்ப்போதையாகும். முன்பு பிரித்தானிய கொலனிய வாதிகள் சீன மக்களை அடக்கி சுரண்டி தமது அதிகாரத்தை நிலை நாட்ட அம் மக்களுக்குத் தாராளமாக அபின் என்ற போதைப் பொருளைத் தாராளமாகக் கொடுத்து மயக்கத்தில் அமிழ்த்தி வைத்து வந்தனர் என்பது வரலாறு. ஆனால், இலங்கையில் தமது முதலாளித்துவ பாராளுமன்ற நிறைவேற்று அதிகார ஆட்சி முறையைத் தக்க வைத்து நீடிக்க சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய வகைப் போதைப் பொருளே பயங்கரவாதத்தை எதிர்த்த போர் என்பதாக உள்ளது. இந்தப் போதைக்குட்பட்ட மக்கள் அதன் மயக்கத்திலிருந்து மீளாதிருக்க மீண்டும் மீண்டும் யுத்தப் போதை ஊட்டப்பட்டே வருகிறது. அதனை இன்றைய தேர்தலுக்கு ஆளும் தரப்பினர் அழகான வர்ண வர்ணக் கடதாசிகளில் சுற்றி சிங்கள மக்களிடையே விநியோகித்து வருகிறார்கள். அதனை விழுங்கி நிற்கும் மக்களிடம் ஆட்சியாளர்கள் கேட்கிறார்கள், சோறு வேண்டுமா அன்றி சுதந்திரம் வேண்டுமா அன்றி நாடு வேண்டுமா அரிசி வேண்டுமா இவற்றில் ஒன்றை எதிர்வரும் தேர்தலில் வெளிக் காட்டுங்கள் என்றே கோரப்பட்டுள்ளது. எமக்குச் சோறு வேண்டாம் அரிசி வேண்டாம் நாடும் சுதந்திரமும் வேண்டும் என்றே யுத்தப் போதை ஏறிய மக்கள் சொல்வார்கள் என்பதில் ஆளும் தரப்பினர் நம்பிக்கையாக உள்ளனர். இருப்பினும் சிங்கள மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது. வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கள் அவர்களது போதை மயக்க மாற்றத்திற்குரிய ஒரு மாற்று மருந்தாக அமையவே செய்யும். அப்போது இப்போது தெற்கில் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் உள்ள பொருளாதார யுத்தமானது தீவிரமடையவே செய்யும். அவ்வேளை இன்று வடக்கு நோக்கி நீட்டப்பட்ட துப்பாக்கிகளும் சுடுகலன்களும் தெற்கு நோக்கித் திருப்பப்படுவதில் எவ்வித காலதாமதமும் காட்டப்படமாட்டாது. 1971 இலும் 198889 இலும் தெற்கில் இதே படைகளும் காவல்துறையினரும் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை வரலாற்றுப் பட்டறிவாகக் கொள்வோர் இலகுவில் இதனை மறந்து விட முடியாது. வடக்கு, கிழக்கிலும், தெற்கிலும் நீட்டப்படும், நீட்டப்பட்ட துப்பாக்கிகள் மாறிமாறி ஏகப்பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு எதிரானவைகள் என்பது அரசியல் ரீதியில் மக்களால் உணரப்படும் போதே மக்களுக்கான விடிவும் விமோசனமும் ஏற்பட இயலும். -காலகண்டன்.

Exit mobile version