மகிந்த ராஜபக்ச தனது தோல்வி உறுதியானதும் இராணுவ பலத்தைக்கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார் என மங்கள சமரவீர குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அதற்கான ஆதரங்களையும் புலனாய்வுப் போலிசில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறுகிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த வேளையில் அதனைத் தடுத்து நிறுத்த இராணுவ பலத்தைப் பயன்படுத்தி மகிந்த முயற்சித்தார் என மங்கள மேலும் தெரிவித்தார்.
முன்னை நாள் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து, பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர், தலைமை நீதிபதி ஆகியோர் உட்பட வேறும் அதிகாரிகள் இணைந்து தேர்தல் முடிவுகள் வெளியிடுவதைத் தடுத்து நிறுத்தினர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் சீ.ஐ.டி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
போலிஸ் மாஅதிபர், இராணுவத் தளபதி, சட்டமா அதிபர் ஆகியோர் மகிந்தவின் ஆணைக்குக் உட்பட மறுத்தமையினால் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை மறுத்துள்ள மகிந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக முன்னரே தான் பதவியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டதாகவும் அதனால் இராணுவத் திட்டம் தவறானது என்றும் குறிப்ப்பிட்டுள்ளார்.
இக் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் சட்டரீதியாக மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் கைது செய்யப்படலாம் என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற விசாரணைக்குப் பதிலாக சீ.ஐ.டி பிரிவிற்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டிருப்பது கைதுக்கான முன்னறிவிப்பு என சிலர் தெரிவித்தனர்.
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் ஊடாக பொது அபிப்பிராயத்தை ஏற்படுத்திய பின்னர் மகிந்த கைது செய்யப்படலாம்.
உலகின் அறியப்பட்ட இனக்கொலையாளியும் போர்க் குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சவைக் ஆட்சிக் கவிழ்ப்புக் குற்றத்தை முன்வைத்துக் கைது செய்வதால் இனப்படுகொலைக்கு எதிரான அரசியலின் நியாயம் அழிக்கப்பட்டுவிடும்.
ராஜபக்ச குடும்பம், சரத் பொன்சேகா உட்பட ஆயிரக் கணக்கானவர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு பங்காற்றிய இனப்படுகொலை மகிந்த ராஜபக்சவைத் தற்காலிகமாக சிறைப்பிடிப்பதன் ஊடாக மறைக்கப்படும்.
முள்ளிவாய்க்காலில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது போன்று மற்றொரு முறை அழிக்கப்படப்போகின்றது. இம்முறை தமிழ்ப் பேசும் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடனேயே அது நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன.