இவ்வாறு புதிய- ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வறிக்கையில், அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்துள்ள தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்டம் பெயரளவில் காட்சி காட்டுவதாகவே உள்ளது. அதே நேரம் அதன் உள்ளடக்கம் அறுபத்தைந்து லட்சம் தனியார் துறைத் தொழிலாளர்கள் ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டவும் அவர்களது உரிமைகளை மறுக்கவும் வழிவகுக்கும் சட்டமாகவே காணப்படுகிறது. இச்சட்டம் அமுலுக்கு வருமானால் தொழில் தருநர்களான பெரு முதலாளிகளும் பல்தேசிய நிறுவனங்களுமே பயனடைவார்கள். அதேவேளை அற்ப பணத்தையே ஓய்வூதியமாகத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வர். அத்துடன் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றையும் இழந்து நிற்க வேண்டிய அவல நிலையே உருவாகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையை ஒரு சில ரூபாய்கள் மூலம் ஏமாற்றுவதையே மூன்று தொழிற்சங்கத் தலைமைகளும் முதலாளிமார் சம்மேளனமும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்து வருகின்றன. இவ்வாறான குறைந்த நாட் சம்பளத் தீர்மானத்திற்கு அரசாங்கமும், சில தொழிற்சங்கங்களுமே தொடர்ந்து முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. எனவே நாட்சம்பளம் 500 ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எமது கட்சி வலியுறுத்துகிறது.
பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானம் பல்கலைக்கழக மாணவர்களை ராணுவக் கண்ணோட்டதுடனான சிந்தனைக்கு வழிகாட்டி ஏற்கனவே ராணுவமயமாக்கி வரும் போக்கை வலுப்படுத்தவே வழிவகுக்கும். நாட்டில் ஏற்கனவே மறுக்கப்பட்டு வரும் ஜனநாயகத்தை மீளப் பெறாதவாறு தடுப்பதற்கான ஒருவகை மூளைச் சலவையாகவே இவ் ராணுவ முகாம் பயிற்சியைப் பயன்படுத்தவே அரசாங்கம் முன் நிற்கிறது. இதனை எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்படி திட்டத்தை கைவிடுமாறு கோருகிறது.
அவ்வாறே பல்கலைக்கழ விரிவுரையாளர்கள் பேராசிரியர்களுக்கு ஏற்கனவே அரசாங்கம் இணங்கிக் கொண்டவாறான சம்பள உயர்வை வழங்க மறுத்து வருவது கண்டனத்திற்குரியதாகும். தமது குறைந்த பட்ச தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கியுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களை மிரட்டிப் பணிய வைக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் எமது கட்சி கண்டித்து எதிர்க்கின்றது.
ஏகாதிபத்திய நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றினதும் பெரு முதலாளிகளினதும் ஆலோசனை வழிகாட்டல், விருப்பங்களுக்கு ஏற்பவே மேற்படி விடயங்களில் மகிந்த சிந்தனை அரசாங்கம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. எனவே இவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்கள், ஊழியர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியாக ஐக்கியப்பட்டு போராட்டங்களை இன மத மொழி பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் முன்னெடுப்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிசக் லெனினிசக் கட்சி வற்புறுத்தி நிற்கின்றது என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கான அறிக்கை 22.05.2011
சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.