Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த அச்சம் : இராணுவத்தில் மாற்றம்!

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இட மாற்றத்திற்குள்ளான இராணுவ அதிகாரிகளில் பலர் யுத்தத்தில் வெற்றி கண்ட இராணுவத் தளபதியும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்களாவர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு, தமக்கு விசுவாசமான பல சிரேஷ்ட அதிகாரிகள் சேவையிலிருந்து விலக்கப்பட அல்லது இடை நிறுத்தி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று தாம் கேள்விப்படுவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்திருந்த வேளையில் இந்த திடீர் இட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்பாறை இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கமாண்டர் பிரிகேடியர் துமிந்த கெபெற்றிவலான வெள்ளிக்கிழமை புலன் விசாரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜெனரல் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரிகேடியர் கெபெற்றிவலான இராணுவ உதவியாளராக சேவையாற்றி வந்தார். மேலும் இளைப்பாறிய 20 அதிகாரிகளும், சிப்பாய்களும் ஏற்கனவே பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கிறார்கள்.

தற்போதைய மாற்றங்களில் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தார்.

ஏற்கனவே பாதுகாப்புப் படையினரின் பிரதானியாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டு கூட்டுத் திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தொண்டர் படைப் பிரிவின் கமாண்டர் ஆக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே பாதுகாப்புப் படையினரின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் பொது அதிகாரிகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இராணுவ நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அருணா ஜயதிலக தற்போது தொண்டர் படை கமாண்டர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய மாற்றங்களில் பிரிகேடியர் ஏ. ரி. டீ. சற் அபேசேகர நிர்வாக பிரிவுக்கான புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ தலைமையகக் காரியாலயத்தில் பொது பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஸ்ரீநாத் ராஜபக்ஷ பாதுகாப்பு படையினரின் பிரதம அதிகாரி அலுவலகத்தில் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் ஜெனரல் ஓர்டினன்ஸாக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் அதுல ஜயவர்த்தன முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகள் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முந்திய பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்போத நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் கிழக்கு பிராந்திய பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்தார். இந்தப் பதவிக்கு தற்போது பிரிகேடியர் சுசில் உடுமல்கல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் எல். ஏ. டி. அமரதுங்க 59 ஆவது படைப் பிரிவின் கட்டளையிடும் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த காலாட்படை தளபதி பதவிக்கு இதுவரை யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைகள் கமாண்டராக பணியாற்றி வந்த மேஜர் ஜெனரல் எல். பி. ஆர். மார்க்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காலாட் படை தளபதியாக தற்போது மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹதுருசிங்க வகித்து வந்த கிளிநொச்சி பாதுகாப்பு படைகள் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பாதுகாப்பு படைகள் கமாண்டர் மேஜர் ஜெனரல் மனோ பெரேரா இராணுவத்தின் 11 ஆவது பிரிவு ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் 65 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜனக வல்கம பாதுகாப்பு அமைச்சில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வகித்து வந்த ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் பதவிக்கு பிரிகேடியர் குமார் ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

53 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டர் மேஜர் சாகி கலகே இராணுவ தலைமைக் காரியாலயத்தில பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ராஜித சில்வா பாதுகாப்புப் படைகள் பிரதம அதிகாரி அலுவலகத்திலிருந்து விலக்கப்பட்டு 58 ஆவது படைப் பிரிவின் ஜெனரல் ஒபீஸ் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version